
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சூரியகுமார் யாதவ், சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர சீனியர் வீரர்கள் அதிகமாக தேர்வாகியுள்ளனர்.
அதே போல சிவம் துபே ஜெய்ஸ்வால் போன்ற சில இளம் வீரர்களும் தேர்வாகியுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்வானது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அத்துடன் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருந்தும் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
உத்தப்பா கருத்து:
அதனால் இம்முறையும் கோப்பையை வென்றால் பார்ப்போம் என்ற நம்பிக்கையற்ற நிலையிலேயே இந்திய ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை முடிந்ததுமே விராட் கோலி ரோஹித் சர்மா, போன்ற சீனியர்கள் இந்தியாவின் நலனை கருதி டி20 கிரிக்கெட்டில் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக 2007இல் நாட்டின் நலனுக்காக சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இளம் வீரர்களுக்கு வழி விட்டதை போல் தற்போதுள்ள சீனியர்கள் செய்திருக்க வேண்டும் என்று உத்தப்பா மறைமுகமாக பேசியுள்ளார்.
அதனால் இம்முறையும் இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “இதற்காக நான் விமர்சனங்களை பிடிக்கலாம். ஆனால் அதை நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் கடந்த உலகக் கோப்பை முடிந்ததுமே நகர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்களை விராட் கோலி சைலன்ட் பண்ணிட்டாரு.. அப்போ மிஸ்ஸானது 2024இல் மிஸ்ஸாகாது.. ஹைடன் நம்பிக்கை
“ஏனெனில் சீனியர் வீரர்கள் விளையாடுவதற்கான நேரத்தை போதுமான அளவு பெற்றனர். மறுபுறம் இந்த இளம் வீரர்கள் முழு திறமையுடன் காத்திருக்கின்றனர். சொல்லப்போனால் அவர்கள் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அசத்தி வருகின்றனர். எனவே சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் முதன்மை இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி இந்தியா வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.