சிஎஸ்கே ரசிகர்களை விராட் கோலி சைலன்ட் பண்ணிட்டாரு.. அப்போ மிஸ்ஸானது 2024இல் மிஸ்ஸாகாது.. ஹைடன் நம்பிக்கை

Matthew Hayden 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அற்புதமான கம்பேக் கொடுத்தது. ஏனெனில் முதல் 7 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்தது.

குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. அதனால் மகளிர் அணியை போல் இந்த வருடம் ஆடவர் ஐபிஎல் கோப்பையையும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

ஹைடன் கணிப்பு:
அந்த அணியின் இந்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார். இதுவரை 14 போட்டிகளில் 708* ரன்கள் அடித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் அதை வெறித்தனமாக கொண்டாடினார்.

அதிலும் குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு நிகராக சத்தமிட்டு சவாலை கொடுத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவர் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் 2024 சீசன் 2016க்குப்பின் விராட் கோலிக்கும் ஆர்சிபி அணிக்கும் மிகச்சிறந்த சீசானாக அமைந்துள்ளதாக மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள ஃபார்முக்கு 1000 ரன்கள் அடித்து 2016இல் தவற விட்ட கோப்பையை இம்முறை விராட் கோலி வெல்வார் என்றும் ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தன்னுடைய இரண்டாவது சிறந்த ஐபிஎல் சீசனை கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம். இப்போதுள்ள ஃபார்முக்கு அவர் 2016 ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை முந்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விளையாட்டின் ஆற்றல், காதல், ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவை விராட் கோலியை மகிமைப்படுத்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கும்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2024 பைனலில் விளையாடப்போகும் 2 அணிகள் இதுதான்.. தனது கணிப்பை கூறிய – ஹர்பஜன் சிங்

“களத்திலோ அல்லது பேட்டை கையில் வைத்திருக்கும் போதோ அதை அவர் பைத்தியக்காரத்தனமாக நேசிக்கிறார். விஷயம் என்னவெனில் அவர் மிகவும் உறுதியானவர். அதை ரசிகர்கள் கூட்டத்திற்கும் அவர் கொடுக்கிறார். கடந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை அமைதியாக இருங்கள் என்று அவர் சில தருணங்களில் வெளிப்படையாக சொன்னார்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து எலிமினேட்டரில் கொல்கத்தா அணியை பெங்களூரு எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement