4 அணியிடம் 1000.. ஓப்பனிங் போட்டியிலேயே கிங் என்பதை காட்டிய கோலி.. யாருமே செய்யாத ஐபிஎல் சாதனை

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் பிரீமியர் லீக் டி20 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 175 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 44, கேப்டன் ரஹானே 56 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணிக்கு பிலிப்ஸ் சால்ட் அதிரடியாக விளையாடிய 56 (31) ரன்கள் குவித்தார். மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (36) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

கிங் கோலி அசத்தல்:

கூடவே கேப்டன் படிதார் 34 (16), லிவிங்ஸ்டன் 15* (5) ரன்கள் எடுத்ததால் 16.2 ஓவரிலேயே 177-3 ரன்களை எடுத்த பெங்களூரு எளிதாக வென்றது. அதனால் இந்தத் தொடரை பெங்களூரு வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் கொல்கத்தா பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்கத் தவறியதால் தோற்றது. முன்னதாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

அதே ஃபார்மில் இந்தப் போட்டியில் பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்தார். பின்னர் சில விக்கெட்டுகள் இழந்ததும் நிதானமாக விளையாடிய அவர் 163.89 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டத்தை முடித்து தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்தார். இந்தப் போட்டியில் எடுத்த 59 ரன்களையும் சேர்த்து கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் தொடரில் விராட் கோலி 1000 ரன்களை (1021) கடந்தார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:

இது போக ஏற்கனவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (1053), டெல்லி கேப்பிட்டல்ஸ் (1057), பஞ்சாப் கிங்ஸ் (1030) அணிக்கு எதிராக தலா 1000+ ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 4 அணிகளுக்கு எதிராக தலா 1000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு யாருமே 3 அணிகளுக்கு எதிராக கூட 1000 ரன்களை அடித்ததில்லை.

இதையும் படிங்க: 13வது ஓவர் வரை கையில் இருந்த கொல்கத்தா வெற்றி.. ஆர்சிபிக்கு கிடைக்க இதான் காரணம்.. கேப்டன் ரஹானே

அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் 2 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். இது போக ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (8063) குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி கிங் என்ற பட்டத்திற்கு நிகராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement