ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்துள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை 21 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு தக்க வைத்தது.
கடந்த 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஒரே அணிக்காக அனைத்து வருடங்களிலும் விளையாடிய ஒரே வீரராகவும் அவர் தனித்துவ சாதனை படைத்துள்ளார். மேலும் இதுவரை கோப்பையை வெல்லா விட்டாலும் நிறைய ரசிகர்கள் பெங்களூரு அணியை விரும்புவதற்கு விராட் கோலி முக்கிய காரணமாகவும் திகழ்கிறார்.
விராட் கோலி சாதனை:
அதன் காரணமாகவே அவரை முதல் வீரராக அந்த அணி பெரிய தொகைக்கு தக்க வைத்துள்ளது என்று சொல்லலாம். சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 20க்கும் மேற்பட்ட கோடிகளை சம்பளமாக பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி, ரோகித் சர்மா, பும்ரா உட்பட வேறு எந்த இந்திய வீரரும் இதுவரை 20+ கோடிகளை சம்பளமாக வாங்கியதில்லை.
இதற்கு முன் அதிகபட்சமாக விராட் கோலி, ரோஹித், ராகுல் தலா 17 கோடிகளை வாங்கியுள்ளார்கள். அதே போல தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை அணிக்காக 18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மட்டுமே முதல் இந்திய வீரராக 20க்கும் மேற்பட்ட கோடிகளை சம்பளமாக பெற உள்ளார். இது ஒரு புறமிருக்க கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் பரிதாபம்:
இத்தனைக்கும் 2024 ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டனாக வீரர்களை வழி நடத்திய அவர் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் பெரிய ரன்களை குவிக்கவில்லை. மேலும் சமீபத்திய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அவர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
இதையும் படிங்க: அந்த சாதனை எனக்கே தெரியாது.. 86/4லிருந்து மீண்டு வர இந்தியா இதை செய்யும்.. ஜடேஜா பேட்டி
அதன் காரணமாக அவரை கொல்கத்தா நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது என்றே சொல்லலாம். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு வருடத்தில் கோப்பையை வென்றும் அடுத்த வருடமே கழற்றி விடப்பட்ட முதல் கேப்டன் என்ற பரிதாப சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த வீரரும் இப்படி கோப்பையை வென்ற அடுத்த வருடமே கழற்றி விடப்பட்டதில்லை.



