
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முடித்த பின்னர் நாடு திரும்பியிருந்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் முடிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இப்படி விராட் கோலி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது.
அதோடு கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை அவர் நெருங்கி நிலையில் 10,000 ரன்களை பூர்த்தி செய்த பிறகாவது விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம் என்று ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர். இவ்வேளையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருவதால் ஓய்வு பெற்ற விராட் கோலி மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகி இருந்தன.
அதனால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புவாரா? என்கிற விவாதமும் சமூக வலைதளங்களில் நிலவி வந்தது. இவ்வேளையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விராட் கோலி தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளார். அந்த வகையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியாவது :
நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பக்கூடும் என்று சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது? அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி கூறியதாவது : அந்த விவாதத்திற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. அது முடிந்து போன ஒரு அத்தியாயம். என்னுடைய கம்பெனி காலணிகளை நான் மலிவான விலைக்கு தருவேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க : 3 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா.. இடையில் எத்தனை ஒருநாள் போட்டிகளை தவறவிட்டுள்ளார் தெரியுமா?
இதன்மூலம் ரசிகர்களின் பல நாள் கேள்விக்கு விராட் கோலியே தனது வாயால் முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் நிச்சயம் அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட திரும்ப மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9,230 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.