SRH vs RCB : உழைச்சு ஜெயிங்க – ஹைதெராபாத்தில் மாஸ் காட்டிய கிங் கோலி – சிஎஸ்கே’வை வெய்ட் பண்ண வைத்த ஆர்சிபி

Virat Kohli 100
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான 65வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 11 (14) ராகுல் திரிபாதி 15 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் – ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் சரிவை சரி செய்ய போராடினர்.

அதில் கேப்டன் மார்க்ரம் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட க்ளாஸென் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார். ஆனால் 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் கடைசி வரை அதிரடியை துவங்காமல் மெதுவாக விளையாடிய மார்க்ரம் 20 (18) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் அந்த தாக்கம் ரன்ரேட்டை பாதிக்காத அளவுக்கு மறுபுறம் நேரம் செல்ல செல்ல பெங்களூரு பவுலர்களை பந்தாடிய க்ளாஸென் 8 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் சதமடித்து 104 (51) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கிங் கோலியின் க்ளாஸ்:
இறுதியில் ஹரி ப்ரூக் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27* (19) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 186/5 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் 2 விக்கெட்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஹைதராபாத் பவலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர்.

அதிலும் குறிப்பாக நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி தமக்கே உரித்தான பாணியில் ஹைதராபாத் ஃபீல்டர்களின் இடைவெளிகளை பயன்படுத்தி பவுண்டரிகளை பறக்க விட்டு கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அந்த வகையில் பவர் பிளே ஓவர் முடிந்தும் ஒவ்வொருவருக்கும் 10 ரன்கள் மேல் குவித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்து ஹைதராபாத் கேப்டன் போட்ட திட்டங்களை தவிடு பொடியாக்கி பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

- Advertisement -

அதில் முதலாவதாக அரை சதமடித்த விராட் கோலி வழக்கம் போல 50 ரன்கள் கடந்ததும் இரு மடங்கு வேகத்தில் அதிரடியாக விளையாடி 172 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100 (63) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மேக்ஸ்வெல் 5* (3) ரன்களும் பிரஸ்வெல் 4* (4) ரன்களும் எடுத்ததால் 19.2 ஓவரிலேயே 187/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு புள்ளி பட்டியலில் மும்பையை முந்தி 4வது இடத்துக்கு முன்னேறியது.

முன்னதாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் ஹைதெராபாத் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு தோற்றால் சென்னை, லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அதே போல மும்பை பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரிக்க இப்போட்டியில் பெங்களூரு தோற்க வேண்டும் என்பதால் அந்த அணிகளின் ரசிகர்கள் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தனர்.

இதையும் படிங்க: IPL 2023 : பயப்படவே. பயப்படாதீங்க. அடுத்த சீசனில் தோனி கண்டிப்பா விளையாடுவாரு – கெவின் பீட்டர்சன் சொன்ன காரணம்

ஆனால் தோற்றால் வெளியேற வேண்டும் என்ற இந்த வாழ்வா சாவா போட்டியில் மாஸ் காட்டிய விராட் – டு பிளேஸிஸ் ஜோடி “உழைத்து ஜெயிக்கிற வழியை பாருங்க” என்ற வகையில் செயல்பட்டு பெங்களூரு அற்புதமான வெற்றியை பெற்று தனது கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் காத்திருப்புக்கும் தள்ளப்பட்டுள்ளன.

Advertisement