எல்லா நாளும் விராட் கோலி காப்பாத்த மாட்டாரு, நைசாக நழுவிய ஓப்பனிங் ஜோடியை வெளுக்கும் ஜாம்பவான் வீரர்

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்கடித்தது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய இந்தியாவின் தோல்வி உறுதியென்று ரசிகர்கள் கவலையடைந்த போது கைகோர்த்த விராட் கோலி – ஹர்திக் பாண்டியா 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்கள்.

Hardik Pandya

- Advertisement -

அதில் 40 (37) ரன்கள் எடுத்து போராடிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அவுட்டான நிலையில் ஃபினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் அவுட்டாகி சென்றார். அதனால் ஏற்பட்ட பரபரப்பில் பதற்றமடையாமல் செயல்பட்ட ரவிசந்திரன் அஸ்வின் அதே ஒய்ட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை திரில் வெற்றி பெற வைத்தார். அதனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா தன்னுடைய அடுத்த போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

கோலி காப்பாத்த மாட்டாரு:
முன்னதாக மெல்போர்ன் நகரில் காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்சை விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சரித்திர வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் இந்த பரபரப்பான போட்டியில் 160 ரன்களை துரத்தும் போது குறைந்தது 30 ரன்களையாவது அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடி ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட மொத்த பாரமும் விராட் கோலி மீது விழுந்தது.

Rahul

ஆனால் அதை தனது அனுபவம் மற்றும் திறமையால் விராட் கோலி சமாளித்து வெற்றி பெற்று கொடுத்ததால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் கடுமையான விமர்சனங்களிலிருந்து நைஸாக நழுவி விட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் அனைத்துப் போட்டிகளிலும் விராட் கோலி இந்தியாவை காப்பாற்ற மாட்டார் என்று டாப் ஆர்டரை விமர்சிக்கும் முன்னாள் வீரர் மதன் லால் இப்படி ஒருசில வீரர்கள் மட்டும் தனி ஒருவனாக போராடினால் கோப்பையை வெல்ல முடியாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரை கடுமையாக சாடிய அவர் வரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் 11 பேர் அணியில் விளையாட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியின் இன்னிங்ஸ் அபாரமானது. அதைப்போன்ற இன்னிங்ஸை நான் பார்த்ததில்லை ஆனால் அவரால் அனைத்துப் போட்டிகளையும் உங்களுக்கு வென்று கொடுக்க முடியாது. இந்தப் பெரிய தொடரில் ஒருவரால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆடுகளங்கள் விராட் கோலியின் ஆட்டத்திற்கு பொருந்தியது. குறிப்பாக பெரிய மைதானத்தை பயன்படுத்தி சிங்கிள், டபுள், 3 ரன்களை எடுத்து இடையில் பவுண்டரிகளை அடித்த அவர் அபாரமாக செயல்பட்டார். அவர் மனதளவில் வலுவாக செயல்பட்டார்”

“ஆனால் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப விளையாட வேண்டும். இந்திய அணியில் அனைவருமே அனைத்து நேரங்களிலும் தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி நடந்தால் தான் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு ஹீரோக்கள் கிடைப்பார்கள். அந்த வகையில் இந்த பயணம் ஆரம்பத்தை மட்டுமே கண்டுள்ளதால் இந்தியாவின் வேலை இன்னும் இருக்கிறது. மேலும் நெதர்லாந்து போன்ற அணிகளும் கத்துக்குட்டிகள் கிடையாது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எந்த அணியும் அடிக்கலாம்”

“அத்துடன் பண்ட் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவர் மேட்ச் வின்னர். 5 போட்டிகளில் அவர் விளையாடினால் உங்களுக்கு இரண்டை வென்று கொடுப்பார் என்பதே அதிகமாகும். அதனால் அவருக்கு 5 – 6 போட்டிகளில் வாய்ப்பளித்தால் வெற்றியில் வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும். மேலும் எதிரணியை பொறுத்து இந்தியா தன்னுடைய 11 பேர் அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது வென்றதால் இதே அணியை தொடர்வது பயனளிக்காது” என்று கூறினார்.

Advertisement