
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 443* ரன்களை அடித்து முக்கிய பங்காற்றி வருகிறார்.
வழக்கம் போல இந்த வருடமும் பெரும்பாலான போட்டிகளில் விராட் கோலி நங்கூரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து வருகிறார். அதன் காரணமாக எதிர்ப்புறம் வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் குவிக்கிறார்கள். ஆனால் விராட் கோலி அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்கவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.
கடந்த காலங்களில் பலமுறை விராட் கோலியை அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் அடித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன்களின் பட்டியலில் விராட் கோலி பெயர் இல்லை என்று அவர் மறைமுகமாக விமர்சித்தார். இது பற்றி ஏப்ரல் 26 ஆம் தேதி ட்விட்டரில் அவர் பதிவிட்டது பின்வருமாறு.
“பேட்டிங் என்று வரும் போது அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய ரன்கள் குவித்த இந்தப் பட்டியல் தான் முக்கியம். பூரான் 205 ஸ்ட்ரைக் ரேட்டில் 377 ரன்கள். பிரியான்ஸ் ஆர்யா 202 ஸ்ட்ரைக் ரேட்டில் 254 ரன்கள். ஸ்ரேயாஸ் 263 ஸ்ட்ரைக் ரேட்டில் 185 ரன்கள். சூரியகுமார் 167 ஸ்ட்ரைக் ரேட்டில் 373 ரன்கள். ஜோஸ் பட்லர் 166 ஸ்ட்ரைக் ரேட்டில் 356 ரன்கள், மிட்சேல் மார்ஷ் 161 ஸ்ட்ரைக் ரேட்டில் 344 ரன்கள்”
“டிராவிஸ் ஹெட் 159 ஸ்ட்ரைக் ரேட்டில் 261 ரன்கள், ஹென்றிச் க்ளாஸென் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 288 ரன்கள், கேஎல் ராகுல் 154 ஸ்ட்ரைக் ரேட்டில் 323 ரன்கள், சுப்மன் கில் 153 ஸ்ட்ரைக் ரேட்டில் 305 ரன்கள்” என்று கூறினார். தற்போது அவருக்கு விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ரீசாந்த் போல ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் அறைந்தது ஏன்? உண்மையில் சண்டையா? டெல்லி அணி விளக்கம்
இது பற்றி த்ரட் இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மிஸ்டர் சஞ்சய் மஞ்ரேக்கர் அவர்களின் ஒருநாள் கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 64.31. எனவே 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுபவர்கள் பற்றி பேசுவது அவருக்கு எளிது” என்று கூறியுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 70 ஸ்ட்ரைக் ரேட்டைக் கூட கொண்டிருக்காத நீங்கள் என் அண்ணனை பேசத் தகுதியற்றவர் என்ற வகையில் விகாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.