ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 48வது போட்டியில் டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் அறைந்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
அதாவது அந்தப் போட்டி முடிந்ததும் இருவரும் நட்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே குல்தீப் யாதவ் சிரித்துக்கொண்டே ரிங்கு கன்னத்தில் அறைந்தார். அதை சற்றும் எதிர்பாராத ரிங்கு வேகமாக பின் வாங்க முயற்சித்தும் கன்னத்தில் அடி வாங்கினார். அப்போது “என்னப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அடிக்கிறீங்க?” என்ற வகையில் ரிங்கு சிங்கின் வாடிய முகத்தில் சோகமான ரியாக்சன் வெளிப்பட்டது.
ரசிகர்கள் சந்தேகம்:
மறுபுறம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த குல்தீப் அடுத்த சில நொடிகளில் மீண்டும் கன்னத்தில் அறைந்தார். இருப்பினும் அப்போது சுதாரித்த ரிங்கு பின்வாங்கியதால் அடியிலிருந்து தப்பினார். அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் பேசிக் கொண்டிருக்கும் போதே இப்படி அடிக்கலாமா? என்று குல்தீப் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது போல ரிங்கு கன்னத்தில் குல்தீப் அறைந்தாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். எனவே இது பற்றி ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐயை கேட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் குல்தீப் யாதவ் – ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
எல்லாம் நட்பு:
அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது முதலே ரிங்குவுடன் அவருக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து ட்விட்டரில் வீடியோ ஆதாரமாக பதிவிட்டுள்ள கொல்கத்தா அணி ரிங்கு கன்னத்தில் குல்தீப் நட்பு ரீதியாகவே அடித்தார் என்று மறைமுகமாக தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தோனி ஜார்கண்ட்க்காக என்ன செய்தாரோ.. அதேபோன்று பீஹாருக்காக சூர்யவன்ஷி செய்வார் – பீஹார் கேப்டன் கருத்து
மேலும் அந்த தருணத்துக்கு பின் குல்தீப் – ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதை “இது தான் ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றும் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசம்” என்ற தலைப்புடன் கொல்கத்தா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை “நட்பு மட்டுமே” என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.



