சச்சினை நெருங்கும் கிங் கோலி, ரிக்கி பாண்டிங்கின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய தனித்துவமான உலக சாதனை

Virat Kohli Ricky Ponting
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 373/7 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்ட தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 83 (67) ரன்களும் 70 (60) ரன்களும் எடுத்தனர்.

Kohli

- Advertisement -

அவர்களை விட 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 113 (87) ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே பெர்னான்டோ 5, குஷால் மெண்டிஸ் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில் நிசாங்கா 72, டீ சில்வா 47 என முக்கிய வீரர்கள் முடிந்தளவுக்கு போராடி ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் வழக்கம் போல தனி ஒருவனாக போராடிய கேப்டன் சனாக்கா சதமடித்து 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் 306/8 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை போராடி தோற்றது.

தனித்துவமான உலக சாதனை:
அதனால் வெற்றி பெற்ற இந்தியா அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதத்தை விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50+ பேட்டிங் சராசரியில் ஏராளமான ரன்களை குவித்து சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததற்காக சந்தித்த விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் 1021 நாட்கள் கழித்து அடித்து நொறுக்கி ஃபார்முக்கு திரும்பினார்.

Virat Kohli 113

அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு போராடிய அவர் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1115 நாட்கள் கழித்து தன்னுடைய 44வது சதத்தை விளாசி 2022 காலண்டர் வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். தற்போது 2023 புத்தாண்டில் முதல் போட்டியிலேயே சதமடித்து வெற்றியுடன் துவக்கியுள்ள அவர் 1144 நாட்கள் கழித்து சொந்த மண்ணில் சதமடித்து முழு பார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்கள் அடித்துள்ள அவர் ஒட்டுமொத்தமாக 73 சதங்களை அடித்து அந்த 2 பட்டியலிலுமே சச்சின் டெண்டுல்கருக்கு பின் 2வது இடத்தில் உள்ளார். மேலும் முதலிடத்தில் முறையே 49 சதங்கள் மற்றும் 100 சதங்களுடன் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை விட குறைவான இன்னிங்ஸில் அதிவேகத்தில் அடித்துள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை விரைவிலும் ஒட்டுமொத்த 100 சதங்கள் சாதனையும் ஓரிரு வருடத்திற்குள்ளும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Virat Kohli

ஏனெனில் தற்போது அந்தளவுக்கு அற்புதமான பார்முக்கு திரும்பியுள்ள அவர் இது வரை அடித்துள்ள 73 சதங்களையும் 3, 4 ஆகிய பேட்டிங் இடங்களில் களமிறங்கி அடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக சதங்கள் அடித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 73*
2. ரிக்கி பாண்டிங் : 72
3. ஜேக் காலிஸ் : 62
4. குமார் சங்ககாரா : 59
5. சச்சின் டெண்டுல்கர் : 55

இதையும் படிங்க: லாராவை நெருங்கி 379 ரன்கள் விளாசிய பிரிதிவி ஷா, ஆல் ஏரியாவிலும் அசத்தி ரஞ்சி கோப்பையில் புதிய வரலாற்று சாதனை

சச்சின் டெண்டுல்கர் அடித்த 100 சதங்களில் 45 சதங்கள் ஓப்பனிங் வீரராக அடித்ததாகும். பொதுவாகவே பவர் பிளே ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே 2 – 3 பீல்டர்கள் மட்டும் நிற்கும் போது தொடக்க வீரர்களாக களமிறங்கி பெரிய ரன்களையும் சதங்களையும் அடிப்பது சற்று எளிதாகும். ஆனால் 3, 4 இடங்களில் களமிறங்கி சதமடிப்பது சற்று கடினமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விராட் கோலி இந்த தனித்துவமான சாதனையை படைத்து மேலும் தன்னுடைய தரத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement