RCB vs GT : காலை வாரிய இதர வீரர்கள் – கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனையை தூளாக்கி ஆர்சிபி’யை காப்பாற்றிய கிங் கோலி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற கடைசி 70வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொண்டது. குறிப்பாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஏற்கனவே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட குஜராத்தை நாக் அவுட் சுற்றுக்கு செல்ல எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு எதிர்கொண்டது. ஆனால் அந்த சூழ்நிலையில் மதியம் முதலே பெங்களூரு ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்த மழை ஒரு வழியாக 7 மணி வாக்கில் கருணை காட்டியது.

அதனால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டு பிளேஸிஸ் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் 5 பவுண்டரியுடன் 28 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 (5) ரன்களில் ரஷித் கான் சுழலில் அவுட்டாகி செல்ல மகிபால் லோம்ரர் 1 (3) ரன்னில் வந்த வாக்கிலேயே செவிலியன் திரும்பினார்.

- Advertisement -

காப்பாற்றிய கிங் கோலி:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக குஜராத்துக்கு சவாலை கொடுத்த விராட் கோலி அரை சதமடித்து ரன்ரேட்டை சரிய விடாமல் பார்த்துக் கொண்டார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி 4வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரியுடன் 26 (16) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது நல்ல ஃபினிஷிங் தேவைப்பட்ட நிலையில் அதை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவையும் ஏமாற்றத்தையும் கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று நன்கு செட்டிலான விராட் கோலி பிட்ச் தன்மையை உணர்ந்து தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை பறக்க விட்டு சதமடித்து 13 பவுண்டரி 1 சிக்சருடன் 101* (61) ரன்கள் குவித்து அசத்திய போது அவரது மனைவி அனுஷ்கா முத்தத்தை காற்றில் பறக்க விட்டு பாராட்டினார். அவருடன் கடைசி நேரத்தில் அனுஜ் ராவத் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 23* (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 197/5 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி கடந்த வருடம் சுமாராக செயல்பட்ட நிலையில் சமீபத்தில் நல்ல ஃபார்முக்கு திரும்பி இந்த சீசனில் ஆரம்பம் முதலே அசத்தலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த போட்டியில் சதமடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துக் கொள்ள உதவிய அவர் இந்த வாழ்வா – சாவா போட்டியிலும் தன்னுடைய அனுபவத்தையும் கிளாஸ் நிறைந்த பேட்டிங்கையும் வெளிப்படுத்தி சதமடித்து காப்பாற்றினார்.

அதிலும் குறிப்பாக வேறு எந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை கூட தாண்டாத நிலையில் தனி ஒருவனாக முதல் ஓவரிலிருந்து கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 7*
2. கிறிஸ் கெயில் : 6
3. ஜோஸ் பட்லர் : 5

இதையும் படிங்க:IPL 2023 : இவங்களா கம்பேக் கொடுக்க போறாங்க? காலிஸ் முதல் கைஃப் வரை – 12 முன்னாள் வீரர்களின் கணிப்பை பொய்யாகிய சிஎஸ்கே

அத்துடன் மழை பெய்ததால் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் சின்னசாமி மைதானத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் உண்மையாகவே வெற்றிக்கு போராடும் அளவுக்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவியுள்ளார். எனவே பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலே இப்போட்டியில் பெங்களூரு வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement