சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
சி.எஸ்.கே அணிக்கெதிராக சாதனை நிகழ்த்திய விராட் கோலி :
அதிலும் குறிப்பாக சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது சாதனை நிகழ்த்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் 196 ரன்கள் குவித்தது.
பெங்களூர் அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 51 ரன்களையும், பிலிப் சால்ட் 32 ரன்களையும் குவித்தனர். அதேவேளையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 30 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 31 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததாலும் சென்னை அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய இந்திய போட்டி துவங்குவதற்கு முன்பாக சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த வீரராக 1057 ரன்களுடன் ஷிகர் தவான் முதலிடத்தில் இருந்தார். அதேபோன்று 1053 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 31 ரன்களையும் சேர்த்து மொத்தமாக சிஎஸ்கே அணிக்கு எதிராக 1084 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் வெவ்வேறு நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி வைத்துள்ளார்.
இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் இப்படி ஒரு விஷயம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.. சி.எஸ்.கே வை சாய்த்த பிறகு – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
இந்த போட்டியில் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணியானது துவக்கத்திலிருந்தே பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதிவரை விளையாடிய அவர்கள் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே குவித்ததால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



