
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தற்சமயத்தில் உலக கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர். அதில் சச்சின் டெண்டுல்கர் போல உலகின் அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுத்து வரும் விராட் கோலி இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
மறுபுறம் 2013 முதல் ஓப்பனிங் வீரராக விளையாடி வரும் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது. அத்தொடரின் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக உலகில் மற்ற அனைத்து நாடுகளை விட பாகிஸ்தானில் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிக பட்டாளம் இருப்பதாகவும் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு முன் பாகிஸ்தானுக்கு வரவேண்டும். உலகில் 2 ஸ்டார் வீரர்களாக இருக்கும் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணித்து விளையாடுகின்றனர். அவர்களை ஒவ்வொரு ரசிகரும் விரும்புகின்றனர். சிறந்த மேட்ச் வின்னிங் செயல்பாடுகள் காரணமாக அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்”
“பாகிஸ்தானுக்கு வந்தால் அங்குள்ள ரசிகர்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் ஆச்சரியமாக இருக்கும். விராட் கோலி பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். ரோஹித் உலகக் கோப்பை வென்ற கேப்டன். பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். எனவே அவர்களைப் போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் அது அங்குள்ள ஒவ்வொரு ரசிகர்களின் உணர்வுகளை அதிகரிக்கும்”
இதையும் படிங்க: நம்பர் ஒன் பேட்ஸ்மேன்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் ஆல் ஃபார்மட் பிளேயர் டேவிட் மாலன்
“விராட் கோலி அண்டர்-19 நாட்களில் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். இருப்பினும் அப்போது அவர் பிரபலமாக இருந்ததில்லை. ஆனால் தற்போது வந்தால் விராட் கோலி பாகிஸ்தானில் தம்முடைய உண்மையான பிரபலத்தை பார்ப்பார். பாகிஸ்தானில் அவருக்கு வித்தியாசமான ஆதரவு கிடைக்கும். விராட் கோலியை விட பாகிஸ்தானில் வேறு எந்த கிரிக்கெட்டரும் பிரபலமானவர் கிடையாது. மற்ற வீரர்களை காட்டிலும் பாகிஸ்தானில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களை விட விராட், ரோஹித், பும்ரா ஆகியோரை அதிகமாக விரும்புகின்றனர்” என்று கூறினார்.