நம்பர் ஒன் பேட்ஸ்மேன்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் ஆல் ஃபார்மட் பிளேயர் டேவிட் மாலன்

Dawid malan
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட இந்தியாவின் சூரியகுமார் யாதவ் போல உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடிய அவருக்கு 30வது வயதில் தான் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை கிடைத்தது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 2017ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அப்போதிலிருந்து இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றினார். நியூசிலாந்துக்கு எதிராக நேப்பியரில் 48 பந்துகளில் டேவிட் மாலன் அடித்த சதத்தை மறக்க முடியாது. அத்துடன் 24 இன்னிங்ஸில் 1000 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

விடை பெற்ற மாலன்:

அதனால் சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்த அவருக்கு 2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பிலும் ஓரளவு நன்றாக செயல்பட்ட அவர் 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு துவக்க வீரராக விளையாடி முக்கிய பங்காற்றினார்.

கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினர். இருப்பினும் அதைத் தவிர்த்து பெரிய ரன்கள் எடுக்காத அவரை இங்கிலாந்து வாரியம் கழற்றி விடத் துவங்கியது. அந்த வரிசையில் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களில் இங்கிலாந்து அணிக்காக டேவிட் மாலன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

- Advertisement -

ஆல் பார்மட் பிளேயர்:

அதனால் தற்போது 36 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள், 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 1074, 1450, 1892 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 4 சதங்கள் அடித்துள்ள அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அது இல்லனா துபே மாதிரி பிளேயர்ஸ் வந்துருக்க மாட்டாங்க.. ரோஹித்துக்கு பதிலுடன்.. பிசிசிஐக்கு அஸ்வின் கோரிக்கை

அத்துடன் வரலாற்றில் ஐசிசி டி20 தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளை (915) பெற்ற பேட்ஸ்மேனாகவும் டேவிட் மாலன் உலக சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை சூரியகுமார் போன்ற வேறு பேட்ஸ்மேன்களால் இதுவரை உடைக்க முடியவில்லை. அந்த வகையில் இங்கிலாந்தின் ஆல் ஃபார்மட் பிளேயராக செயல்பட்டு விடைபெறும் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement