தோனிக்கு கிடைத்த சப்போர்ட் சேவாக், ஹர்பஜன் போன்ற எங்களுக்கு கிடைக்கல – நட்சத்திர முன்னாள் வீரரின் குமுறல்

Shastri
- Advertisement -

இந்தியாவிற்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின் கடந்த 2020இல் இந்தியாவின் சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இருப்பினும் கூட தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

தரமான தோனி:
கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த எம்எஸ் தோனி தனது அதிரடியான பேட்டிங், மின்னல்வேக விக்கெட் கீப்பிங் போன்றவற்றால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து 2007இல் அனுபவமே இல்லாத போதிலும் கேப்டன் பொறுப்பேற்ற அவர் டி20 உலகக் கோப்பையை வென்று 2011இல் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பை எனும் மாபெரும் வெற்றி கனியை இந்தியா மீண்டும் முத்தமிடுவதற்கு கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தினார்.

அதன்பின் 2013இல் சச்சின் போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் விராட் கோலி போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்று காட்டினார். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு நிறைய மூத்த வீரர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு அவர் வாய்ப்பளித்த காரணத்தாலேயே இன்று இந்திய கிரிக்கெட் அணி வளமாகக் காட்சியளிக்கிறது.

dhoni

அதேபோல் 2014இல் டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்த அவர் 2017 முதல் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடி ஆச்சரியப்படுத்தினார். ஒரு மகத்தான கேப்டன், அற்புதமான பினிஷர், மின்னல்வேக விக்கெட் கீப்பர் போன்ற பல பரிணாமங்களை கொண்ட அவருக்கு 2017 – 2019 வரையிலான காலகட்டத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஏராளமான ஆதரவு அளித்தார்.

- Advertisement -

சான்ஸ் கொடுக்கல:
பொதுவாக எந்த ஒரு ஜாம்பவான் வீரர்களும் தங்களது கடைசி காலகட்டங்களில் வயது காரணமாக சற்று சுமாராக செயல்படுவார்கள். அதுபோன்ற நேரங்களில் அணி நிர்வாகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் வயது ஒரு தடையல்ல என்று நிரூபிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையால் மூத்த வீரர்களுக்கும் சிறப்பாக செயல்படுவார்கள். அந்தவகையில் தோனிக்கு கிடைத்த ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியின் கடைசி கால கட்டத்தை பாருங்கள். அவருக்கு விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் ஆதரவு நிறைய இருந்தது. அவர்கள் அவரை உலக கோப்பைக்கு அழைத்துச் சென்றதால் கடைசிவரை அவருக்கு வாய்ப்பு கிடைத்து 350 போட்டிகளில் விளையாடினார். அதுபோன்ற ஆதரவு மிக முக்கியமானது. ஆனால் அது இந்திய கிரிக்கெட்டில் அனைவருக்கும் கிடைக்கவில்லை. ஹர்பஜன்சிங், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், கௌதம் கம்பீர் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. அதுபோன்ற கடைசி காலங்களில் சரியாக பேட்டிங் செய்யவில்லையெனில் இடம் பறிபோய்விடும் என்ற எண்ணத்தால் எப்படி அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். அதற்காக யாரையும் குறை கூற முடியாது என்றாலும் 2011க்கு பின் புதிய பயிற்சியாளர்கள் உட்பட பல விஷயங்கள் மாறிப்போனது” என்று கூறினார்.

- Advertisement -

சுமாரான செயல்பாடு:
அதாவது தாம் உட்பட வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் தங்களது கடைசி காலங்களை எம்எஸ் தோனியின் கீழ் விளையாடின நிலையில் விராட் கோலி தலைமையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு சேவாக் போன்ற ஜாம்பவான்களுக்கு தோனி அளிக்கவில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2011 உலகக்கோப்பைக்கு பின் வருங்காலத்தை கட்டமைக்கும் வகையில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா என ஏராளமான நிறைய இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு வழங்கியதாலேயே சுமாராக செயல்பட்ட மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை.

Yuvraj 1

ஒருவேளை இளம் வீரர்களுக்கு பதில் யுவராஜ் கூறுவதுபோல மூத்த வீரர்களுக்கு தோனி வாய்ப்பளித்திருந்தால் இந்நேரம் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தடுமாறுவதை போல இந்தியாவும் தடுமாறிக் கொண்டிருக்கும் என்பதே நிதர்சனம்.

அத்துடன் யுவராஜ் போன்ற வீரர்களுக்கு 2014, 2016 போன்ற டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி வாய்ப்பு வழங்கியதையும் ஆனால் அதில் அவர் பெரிய அளவில் சோபிக்க தவறியதையும் யாரும் மறக்கக்கூடாது. குறிப்பாக 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

இதை யுவராஜ் சிங்கும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2014 டி20 உலக கோப்பையில் என்னை அணியை விட்டு நீக்கி விடுவார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. அது குற்றமில்லை என்றாலும் அந்த சமயம் அணியிலிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் இறுதிப்போட்டியில் பந்தை நான் அடிக்க முயற்சித்தும் அடிக்க முடியவில்லை. அதற்காக அவுட்டாக நினைத்தும் அதுவும் நடக்கவில்லை. அதனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்தது போலவே நானும் நினைத்தேன். அதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் வெற்றியை ஏற்றுக்கொள்வது போல் தோல்வியையும் ஏற்றுக் கொண்டு நகர்ந்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement