
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதும் லீக் போட்டி ஜனவரி 30ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. அந்தப் போட்டியில் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து களமிறங்கியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டெல்லியைச் சேர்ந்த அவர் ஐசிசி 2008 அண்டர் 19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 26,000 ரன்கள் 81 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
அதன் காரணமாக 2012க்குப்பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை விராட் கோலி எடுத்துள்ளார். அவர் விளையாடுவதை பார்ப்பதற்காக உள்ளூர் ரசிகர்களுக்கு இலவச அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் நேற்று துவங்கிய போட்டியின் முதல் நாளிலேயே 15000 மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விராட் கோலிக்கு மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்தார்கள்.
மேலும் ஆர்சிபி, கோலி கோலி, கோலிக்கு பவுலிங் கொடுங்கள் என்று விதவிதமாக கோஷங்கள் இட்டு அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதில் ஒரு ரசிகர் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு விராட் கோலி காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டார். அப்படி எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரயில்வே 241 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக உபேந்திரா யாதவ் 95 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக நவதிப் சைனி, சுமித் மாதுர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக களம் இறங்கிய டெல்லிக்கு அர்பித் ராணா 10, சனாத் சங்வான் 30 ரன்களில் அவுட்டானார்கள். அதற்கு அடுத்ததாக ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி 14 பந்துகள் எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடினார்.
இதையும் படிங்க: எங்க டீமுக்கு வரதுக்கு முன்னாடியே இப்படியா? பில் சால்ட்டால் வருத்தத்தில் ஆர்.சி.பி நிர்வாகம் – என்ன ஆனது?
15வது பந்தில் ஹிம்சான்சு வேகத்தில் அவர் 6 ரன்னில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதனால் அதிர்ந்து போன ரசிகர்கள் அடப் போங்கய்யா என்ற வகையில் டெல்லி மைதானத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறார்கள். மொத்தத்தில் 12 வருடங்களுக்குப் பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி எந்த முன்னேற்றத்தையும் காட்டாமல் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.