பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவு பெற்றது. அந்த தொடரில் 6 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா தங்கப்பதக்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக 50 கிலோ மகளிர் மல்யுத்த விளையாட்டில் வினேஷ் போகத் செமி ஃபைனலில் நடப்பு சாம்பியனை தோற்கடித்து ஃபைனலுக்கு சென்றதால் தங்கம் வெல்வார் என்று அனைவரும் ஆசையுடன் காத்திருந்தனர்.
ஆனால் ஃபைனலுக்கு முந்தைய நாள் இரவு நடைபெற்ற சோதனையில் வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதே காரணத்தால் மல்யுத்தத்தில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தது ரசிகர்களை மேலும் சோகமடைய வைத்தது.
கங்குலி கோரிக்கை:
இருப்பினும் அதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலையில் வினேஷ் போகத் ஊக்க மருந்து உட்கொண்டது போன்ற விதிமுறைகளை மீறவில்லை என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். எனவே விளையாட்டின் தார்மீகம் மற்றும் உணர்வுகளை மதித்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் சச்சின் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேர்மையாக போராடி ஃபைனலுக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கு தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். எனவே ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு வெள்ளிப் பதக்கம் கொடுக்க வேண்டும் என்று கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“எனக்கு சரியான விதி தெரியாது. ஆனால் இறுதிப் போட்டிக்கு வந்த போது வினேஷ் போகத் சரியான முறையிலேயே தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே நீங்கள் ஃபைனலுக்கு செல்லும் போது உங்களுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாக கிடைக்கும். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது”
இதையும் படிங்க: அவங்க மட்டும் ஃபிட்டாகி விளையாடுனா.. ஆஸ்திரேலியாவில் இந்தியா ஹாட்ரிக் வரலாறு படைக்கும்.. வாசிம் ஜாபர்
“ஆனால் குறைந்தபட்சம் அவர் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் வினேஷ் போகத் மேல்முறையீடு கோரிக்கையின் தீர்ப்பை ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகம் ஆகஸ்ட் 13ஆம் இரவு 9.30 மணிக்கு வழங்க உள்ளது. அதில் அனைவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு ஒலிம்பிக் நிர்வாகம் வெள்ளிப் பதக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.