
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதிய வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி இருந்தாலும் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெடுகளை 167 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஓமன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விநாயக் சுக்லா தனக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தான் இன்ஸ்பிரேஷன் என்றும் அவரை ஒருநாள் நேரில் பார்க்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது :
ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக என்னுடைய குரு மகேந்திர சிங் தோனி தான். அவர் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக போட்டிகளை முடித்துக் கொடுத்த விதம் யாருடனும் ஒப்பிட முடியாத ஒன்று. அவரை நான் இதுவரை எங்கும் சந்தித்ததே கிடையாது. ஒருநாள் நிச்சயம் அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இந்திய கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி ஓமன் நாட்டிற்கு என்னுடைய கிரிக்கெட் கனவிற்காக வந்தேன்.
அதன்பிறகு டேட்டா ஆப்ரேட்டராக வேலை செய்து கொண்டே தற்போது ஓமன் நாட்டு அணிக்காக விளையாடி வருகிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய நான் எனக்கு போதிய வாய்ப்புகள் அங்கு கிடைக்கவில்லை என்பதற்காக இங்கு வந்து விளையாடி வருகிறேன்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து – மவுனம் கலைத்த ஜெய்ஸ்வால்
நான் இந்தியாவில் இருக்கும்போது குல்தீப் யாதவுடன் இணைந்து நிறையவே விளையாடி இருக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நான் விளையாடிய போது தொலைக்காட்சியில் பார்த்த பல நட்சத்திர வீரர்களுடன் நேரத்தை செலவிட்டு விளையாடுகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்தது. நேரில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது ஒரு அற்புதமான உணர்வு என்றும் விநாயக் சுக்லா கூறியது குறிப்பிடத்தக்கது.