யார்கிட்ட கதை விடுறீங்க, ஆதார புள்ளிவிவரங்களுடன் ராகுல் டிராவிட்டை விளாசிய வெங்கடேஷ் பிரசாத் – நடந்தது என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இத்தொடரில் துணைக் கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற கேஎல் ராகுல் 20, 15, 1 என மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு வரும் அவருக்காக சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அவர்களை சமாளிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் துணை கேப்டன்ஷிப் பதவியை மட்டும் பறித்துள்ள தேர்வுக்குழுவினர் மீண்டும் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதை விட இது போன்ற மோசமான தருணங்கள் வருவது சகஜம் என்றாலும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்து தனது தரத்தை நிரூபித்துள்ள ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று 2வது போட்டியின் முடிவில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தது ரசிகர்களை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

கதை விடுறிங்களா:
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் அபாரமாக செயல்பட்டதாக ராகுல் டிராவிட் போன்றவர்கள் தெரிவிப்பது முற்றிலும் தவறானது என்ற வகையில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே ராகுல் பற்றி அடுக்கடுக்காக புள்ளி விவரங்களுடன் விமர்சித்து வரும் அவர் இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் மிகச் சிறந்த புள்ளி விவரங்களை வைத்துள்ளதாக சில கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால் புள்ளிவிவரங்களோ முற்றிலும் மாறுபட்டதை பேசுகின்றன. இதுவரை வெளிநாட்டு மண்ணில் ராகுல் விளையாடிய 56 இன்னிங்ஸில் 30 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அவர் 6 சதங்களை அடித்துள்ளார். ஆனால் அதன் பின் மோசமாக செயல்பட்ட காரணத்தாலேயே அவருடைய சராசரி 30 என்ற அளவில் வந்து விட்டது. இந்த இடத்தில் சில இதர வீரர்களின் புள்ளி விவரங்களையும் பார்க்க வேண்டும்”

- Advertisement -

“இந்தியாவின் சமீபத்திய தொடக்க வீரர்களில் ஷிகர் தவான் தான் வெளிநாட்டில் சிறந்த சராசரியை கொண்டுள்ளார். அங்கே அவர் கிட்டத்தட்ட 40 என்ற சராசரியில் 5 சதங்களை அடித்துள்ளார். அவர் தொடர்ச்சியாக செயல்படவில்லை என்றாலும் நியூசிலாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளில் சதங்களை அடித்துள்ளார். மேலும் சொந்த மண்ணில் அபாரமான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். அதே போல் ஆஸ்திரேலியாவில் நல்ல தொடக்கத்தை பெற்ற மயங் அகர்வால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறியுள்ளார்”

“ஆனால் அவர் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சொந்த மண்ணில் 13 இன்னிங்ஸில் 70 என்ற சராசரியுடன் 2 இரட்டை சதங்களை அடித்துள்ள அவர் அனைவரும் தடுமாறிய வான்கடே மைதானத்தில் 150+ ரன்களை அடித்துள்ளார். பொதுவாக சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் சமீபத்திய உள்ளூர் தொடரிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதே போல் சுப்மன் கில் தனது குறுகிய கேரியரில் 14 வெளிநாட்டு இன்னிங்ஸில் 37 என்ற சராசரியை கொண்டுள்ளார்”

- Advertisement -

“குறிப்பாக காபாவில் 4வது இன்னிங்ஸில் 91 ரன்கள் குவித்தது அற்புதமானது. அந்த வகையில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த செயல்பாடுகள் அவசியம் என்றால் அஜிங்கிய ரகானேவும் இங்கே வருவார். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 50 போட்டிகளில் 40+ சராசரியை கொண்டுள்ள அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறியதால் நீக்கப்பட்டார்.

இதையும் படிங்க:IND vs AUS : தோத்தது கூட பிரச்சனை இல்ல. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா தான் கஷ்டமா இருக்கு – இயான் சேப்பல் கருத்து

ஆனால் இந்த ஆஸ்திரேலிய தொடரின் கடைசி 2 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் இந்தூரில் நடைபெறும் 3வது போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பை பெற்றால் மிகச் சிறப்பாக செயல்பட்டு என்னைப் போன்ற விமர்சகர்களை அமைதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கவுண்டி சாம்பியன்ஷிப் போன்ற உள்ளூர் தொடரில் விளையாடி இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement