தோனியின் வார்த்தைகள மதிக்காம தப்பா யூஸ் பண்றாங்க, இந்திய அணியில் நிலவும் குளறுபடிகள் – குறித்து வெங்கடேஷ் பிரசாத் கவலை

Venkatesh Prasad 5
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஓய்வெடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது.

ஆனாலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா முதல் முறையாக வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோற்று 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் தற்சமயத்தில் 2023 உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறாமல் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இப்படி தோற்றதே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

தோனியின் வார்த்தைகள்:
அந்த வரிசையில் உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறாமல் தடுமாறும் அணிக்கு எதிராக இந்தியா தோற்றது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனியின் வார்த்தைகளை தற்போதைய இந்திய அணி நிர்வாகம் தவறாக பயன்படுத்தி வருவதாக அவர் மீண்டும் விமர்சித்துள்ளார். அதாவது ஒரு போட்டி அல்லது தொடரின் முடிவை பற்றி கவலைப்படாமல் அதனுடைய செயலில் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி தாமாக வரும் என்பது தோனியின் தாரக மந்திரம் என அனைவருமே அறிவோம்.

இருப்பினும் அதை பின்பற்றாமல் தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணியில் நிலையற்ற தேர்வுகள் சம்பந்தப்பட்ட முடிவுகள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கும் வெங்கடேஷ் பிரசாத் தற்போதிருக்கும் கேப்டன் என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதை விட அணியின் நலனுக்காக பவுலர்கள் பேட்டிங் செய்ய மாட்டோம் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்ய மாட்டோம் என்ற வகையில் அடம் பிடிப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றிய ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா தற்போது சாதாரண அணியாகவே செயல்படுகிறது. அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்துள்ளார்கள். மேலும் நாம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோற்றோம். எனவே முட்டாள்தனமான அறிக்கையை வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் சுயபரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த தடுமாற்றத்திற்கு இந்திய அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் தான் பொறுப்பாவார்கள். மற்றும் அவர்கள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்”

“செயல்முறை எனும் வார்த்தை இப்போது தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எம்எஸ் (தோனி) அதற்கான பொருளைக் கூறியுள்ளார். இப்போது அதற்குரிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள் தோழர்களே. ஏனெனில் தற்போதைய அணியின் தேர்வில் நிலைத்தன்மை இல்லை சீரற்ற விஷயங்கள் அதிகமாக நடக்கிறது. இந்தியா தங்களுடைய திறமையையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய அணியில் வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வத்தில் குறை காணப்படுகிறது”

இதையும் படிங்க:ஏமாற்றமா இருக்கு, அந்த ஒரு விஷயத்துல வெ.இ பாடம் எடுத்துட்டாங்க – வரலாற்றுத் தோல்விக்கு பின் டிராவிட் கவலையுடன் பேசியது என்ன?

“கேப்டன் என்ன செய்வதென்றே தெரியாமல் பார்க்கிறார். பவுலர்கள் பேட்டிங் செய்ய மறுக்கின்றனர். பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்ய மறுக்கின்றனர். இந்த சமயத்தில் ஆம் என்று சொல்லும் கண்மூடித்தனமான நபரை தேடாமல் இருப்பது முக்கியம். ஏனென்றால் அதில் யாரோ ஒருவர் உங்களுக்கு பிடித்த வீரராக இருப்பார். ஆனால் அதை விட்டு பெரிய நல்லதை பாருங்கள்” என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு எதிராக இவர் இப்படி தொடர்ந்து உண்மையான கருத்துக்களை ஆதாரங்களுடன் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement