இந்தியாவ நரகத்துக்கு அனுப்பிடுவோம், பகிரங்கமாக எச்சரித்த மியான்தத்துக்கு வெங்கடேஷ் பிரசாத் நக்கல் பதிலடி

Venkatesh prasad Javed Miandad
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வருடம் துபாய் மற்றும் ஆஸ்திரேலியாவில் மோதிய இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது நடைபெறுமா என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே காணப்படுகிறது.

ஏனெனில் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் நடந்த முதல் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் 2023 ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் இந்திய அரசின் அனுமதியில்லாமல் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்போம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

பிரசாத் பதிலடி:
ஆனால் ஏற்கனவே உரிமையை பெற்றுள்ள தங்களைக் கேட்காமல் ஆசிய கவுன்சில் தலைவர் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் எங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே அக்டோபரில் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது. அந்த நிலைமையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் 2023 ஆசிய கோப்பை பற்றிய விவகாரத்தை எழுப்பியும் பிடி கொடுக்காத ஜெய் ஷா அந்த முடிவை அடுத்த கூட்டத்திற்கு தள்ளி வைத்ததாக செய்திகள் வெளியானது.

அதனால் கோபமடைந்த புதிய பாகிஸ்தான் தலைவர் நஜாம் சேதி எங்களது நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை நாங்கள் புறக்கணிப்போம் என்று ஜெய் ஷா’விடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. அதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தங்களது நாட்டுக்கு வந்து தங்களுடன் விளையாடினால் தோல்வியை சந்தித்து விடுவோம் என்ற பயத்தினாலேயே பாகிஸ்தான் வருவதற்கு இந்தியா மறுப்பு தெரிவிப்பதாக முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் புதிய புயலை கிளப்பினார்.

- Advertisement -

குறிப்பாக ஒருவேளை பாகிஸ்தான் மண்ணில் இந்தியா தோற்றால் அதை ஜீரணிக்க முடியாமல் இந்திய மக்கள் இந்திய வீரர்களின் வீட்டை எரித்து விடுவார்கள் என்ற பயத்தாலேயே அவர்கள் தங்களது நாட்டுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக கூறிய அவர் இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு இந்தியாவை தடை செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக பேசினார். அதை விட பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாமல் போனால் பின்னர் இந்தியா நரகத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றும் பகிரங்கமாக அவர் பேசியது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலான அவரது கருத்தை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத். “அதனால் தான் அவர்கள் (இந்தியா) நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள்” என்று கலாய்க்கும் வகையில் நக்கலான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என்னதான் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்தி சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் நடத்தினாலும் இப்போதும் பாகிஸ்தானில் சில பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. எடுத்துக்காட்டாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விரைவில் துவங்கும் 2023 பிஎஸ்எல் தொடருக்கு ரசிகர்களை கவர்வதற்காக பாபர் அசாம் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற கண்காட்சி போட்டி நடைபெற்றது.

இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது ஸ்பின்னர் வேனும்னா இவரை எடுங்க. அதுதான் கரெக்ட் – ரவி சாஸ்திரி கருத்து

இப்திகார் அகமது ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த அப்போட்டி பரபரப்பாக நடைபெற்றாலும் 2வது இன்னிங்ஸில் மைதானத்தில் ஏற்பட்ட தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்கிருந்து பாபர் அசாம், சாஹித் அப்ரிடி போன்ற நட்சத்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். அப்படி சொந்த நாட்டு வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத பாகிஸ்தானுக்கு சென்றால் நரகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்தாலே இந்தியா உங்கள் நாட்டுக்கு வர மறுப்பதாக ஜாவேத் மியான்தத்துக்கு மறைமுகமான நெத்தியடி பதிலை வெங்கடேஷ் பிரசாத் கொடுத்துள்ளார்.

Advertisement