கர்நாடகவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருவதால் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக 8 வருடங்கள் விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நேரடியாக விமர்சித்த முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உங்களால் சுப்மன் கில், சர்ஃபாஸ் கான் போன்ற இளம் வீரர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் உங்களை விட அஸ்வின் சிறந்த துணை கேப்டன் என்று தாக்கிய அவர் பார்முக்கு திரும்ப ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு புஜாராவை போல் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட முடியுமா என்றும் கோரிக்கை வைத்தார்.
அத்துடன் உங்கள் மீது எந்த பகைமையும் இல்லை என்று தெரிவித்த அவர் அக்கறை காரணத்தாலேயே இப்படி விமர்சிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த நிலையில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ராகுல் சுமாராக செயல்பட்டாலும் வெளிநாட்டில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் ராகுலை விட ஷிகர் தவான், ரகானே ஆகியோர் வெளிநாட்டு மண்ணில் சிறந்த புள்ளி விவரங்களை கொண்டிருந்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறியதால் கழற்றி விடப்பட்டதை டிராவிட்டுக்கு ஆதாரங்களுடன் வெங்கடேஷ் பிரசாத் பதிலடியாக கொடுத்தார்.
சமாதான புறா:
அப்படி கடந்த சில நாட்களாகவே ஆதாரத்துடன் வெங்கடேஷ் பிரசாத் முன்வைத்த விமர்சனங்களில் நியாயம் இருந்ததால் பெரும்பாலான நட்சத்திரங்கள் அமைதியாகவே இருந்தனர். ஆனால் அந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தவறான புள்ளி விவரங்களுடன் சொந்த விருப்பு வெறுப்புக்காக ராகுலை விமர்சிக்காதீர்கள் என்று தனது கையில் ஒரு புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு யூடியூப் பக்கத்தில் 12 நிமிட வீடியோ போட்டு வெங்கடேஷ் பிரசாத்துக்கு பதிலடி கொடுத்தார்.
அதற்கு உண்மையாகவே கடந்த 2012இல் சொந்த வெறுப்புக்காக ரோகித் சர்மாவை விமர்சித்து பதிவிட்ட 11 வருட பழைய ட்வீட்டை ஆதாரமாக தோண்டி எடுத்த வெங்கடேஷ் பிரசாத் நான் உங்களைப் போல் எந்த யாரையும் சொந்த வெறுப்புக்காக விமர்சிக்கவில்லை என்று மாஸ் பதிலடி கொடுத்தார். மறுபுறம் தம்மைப் பற்றிய உண்மை அம்பலமானதால் ரோகித் சர்மாவை பற்றிய 11 வருட பழைய ட்வீட்டை உடனடியாக டெலீட் செய்த ஆகாஷ் சோப்ரா யூடியூப் பக்கத்தில் தாம் பேசியதை கூகுள் நிறுவனம் தவறுதலாக மொழி பெயர்த்ததாகவும் அதனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் வெங்கடேஷ் பிரசாத்துக்கு பணிவுடன் பதில் கொடுத்தார்.
அத்துடன் இந்த விவகாரத்தை தமது யூடியூப் சேனலில் நேரடியாக விவாதிக்கலாம் என்று சமாதான வெள்ளை புறாவை பறக்க விடும் வகையில் ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் அழைப்பு விடுத்தார். ஆனால் அனைத்து கருத்துகளையும் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டதால் இதில் மேற்கொண்டு உங்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு இறுதியான பதிலை கொடுத்துள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா முதலில் பதிவிட்டது பின்வருமாறு.
Venky bhai, msgs are getting lost in translation. You here. Me on YT. I invite you to come on a Video Chat…we can do it Live. Difference on opinions is nice…lets do it properly 😊
I’ll not have any sponsors on it & nobody will make money out of it. Up for it? You have my number https://t.co/ZrAzWoJiTv— Aakash Chopra (@cricketaakash) February 21, 2023
No Aakash, nothing is lost in translation. In your 12 minute video you have called me as an agenda peddler because it didn’t suit your narrative.
It is crystal clear. And I have made my points very clear in this Twitter thread. Don’t wish to engage with you further on this 🙏🏼 https://t.co/GhlfWI0kHA
— Venkatesh Prasad (@venkateshprasad) February 21, 2023
“வெங்கி பாய். மொழிமாற்றம் செய்யப்பட்ட போது எனது கருத்துக்கள் காணாமல் போய்விட்டன. நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். நான் யூடியூபில் இருக்கிறேன். அதனால் நான் உங்களை வீடியோ சாட்டிங் செய்ய அழைக்கிறேன். இதைப் பற்றி நாம் நேரலையில் பேசலாம். வித்தியாசமான கருத்துக்களை நேரடியாக சரியான முறையில் பேசுவோம். அதற்காக நான் எந்த ஸ்பான்சரையும் வாங்க மாட்டேன். யாரும் அதில் பணமும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் அதற்கு தயாரா? உங்களிடம் என்னுடைய போன் நம்பர் இருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு – மேலும் ஒரு வீரர் அணியில் இருந்து விலக வாய்ப்பு
அதற்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலளித்தது பின்வருமாறு. “இல்லை ஆகாஷ். மொழிபெயர்ப்பில் எதுவும் காணாமல் போகவில்லை. உங்களுடைய 12 நிமிட வீடியோவில் நீங்கள் என்னை சொந்த வெறுப்புக்காக விமர்சித்தேன் என்று கூறினீர்கள். ஏனெனில் அது உங்களது கருத்துக்கு சரி வரவில்லை. ஆனால் எனது கருத்துக்கள் தெளிவாக உள்ளது. எனது அனைத்து கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்து விட்டேன். எனவே மேற்கொண்டு இதை பற்றி நான் உங்களிடம் விவாதிக்க எதுவுமில்லை” என்று கூறினார். மொத்தத்தில் இவர்கள் மோதிக்கொள்வது ராகுல் விளையாடுவதை விட மிகவும் பரபரப்பாக இருப்பதாக ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.