IND vs ENG : கங்குலி, சேவாக்கையே தண்டிச்சீங்க – விராட், ரோஹித்தை மட்டும் ஏன் சும்மா விடறீங்க

Rohith-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற 3-வது போட்டியில் இந்தியா போராடி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 215/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மாலன் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (39) ரன்களும் லியம் லிவிங்ஸ்டன் 4 பவுண்டரியுடன் 42* (29) ரன்களும் குவித்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் 1 (5), ரோகித் சர்மா 11 (12), விராட் கோலி 11 (6) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/3 என சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடினர்.

- Advertisement -

இந்தியா போராட்டம்:
அதில் கடைசி வரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 (7) ரவீந்திர ஜடேஜா 7 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் கடைசி நேரத்தில் அவுட்டாகி கைவிட்டனர். இருப்பினும் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 117 (55) ரன்கள் விளாசி கடைசியில் ஆட்டமிழந்ததார். அதனால் 20 ஓவர்களில் 198/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. இருப்பினும் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றிகளை பதிவு செய்திருந்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சமீபத்திய டெஸ்ட் போட்டியில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து பதிலடி கொடுத்துள்ளது.

மீண்டும் சொதப்பல்:
டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடர்களில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படும் நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூத்த வீரர்கள் தொடர்ந்து சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர். இத்தனைக்கும் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து போன்ற தொடர்களில் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் சீனியர்கள் அணிக்குள் வந்ததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டனர்.

- Advertisement -

அந்த நிலைமையில் இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 66 ரன்களையும் 2 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்தது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிலும் கடந்த 2019க்கு பின் கடந்த 3 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் நட்சத்திரம் விராட் கோலி முன்பைவிட மோசமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2008இல் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியில் முக்கிய முதுகெலும்பு பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே 70 சதங்களை அடித்து நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளதால் இதுவரை பார்மை காரணம் காட்டி அணி நிர்வாகம் நீக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள்தான் ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுப்பீர்கள் என்று கபில்தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனங்களை அடிக்கிக் கொண்டே வருகின்றனர்.

- Advertisement -

உயரும் போர்க்கொடி:
இந்நிலையில் வரலாற்றில் சௌரவ் கங்குலி, சேவாக் போன்ற பெரிய பெயருடைய வீரர்கள் பார்மின்றி தவித்த போது அணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறும் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் அது போன்ற நிலைமையில் அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பார்முக்கு திரும்பினார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெயருடைய வீரர்கள் ரன்கள் எடுக்கவில்லை என்றால் மரியாதையுடன் ஓய்வு கொடுக்கப்படுவதாக விமர்சித்துள்ள அவர் இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“ஒரு காலத்தில் பெரிய பெயருடைய வீரர்களானாலும் பார்மில் இல்லை என்றால் நீக்கப்பட்டார்கள். சௌரவ், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் போன்றவர்களே பார்மில் இல்லாத போது நீக்கப்பட்டார்கள். அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று ரன்களை அடித்து கம்பேக் கொடுத்தனர். ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி பார்மில் இல்லாத வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் நமது நாட்டில் நிறைய திறமையுடைய வீரர்கள் பெரிய பெயருடைய வீரர்களால் விளையாடும் வாய்ப்பை பெற முடிவதில்லை. இந்தியாவின் மிகப் பெரிய ஜாம்பவான் அனில் கும்ப்ளேவும் பார்மின்றி தவித்த போது பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். எனவே இதன் மீது விரைவில் நடவடிக்கை தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்திலேயே சம்பவம் நடந்திருக்கு. டி20 உ.கோ வெல்ல வாய்ப்பிருக்கு – இந்தியாவை பாராட்டும் பாகிஸ்தான் வீரர்

இதேபோல் திறமையுடைய நிறைய வீரர்கள் பெஞ்சில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement