இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி குவாலிபயர் 1 போட்டியில் 2வது இடம் பிடித்த ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மே 21ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் வெறும் 160 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55, ஹென்றிச் க்ளாஸென் 32, கேப்டன் கமின்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே எளிதாக இலக்கை தொட்டு வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51*, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 58* ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
ஆர்சிபி மாதிரி:
அதனால் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் எலிமினேட்டரில் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் தங்களின் கடந்த 2 லீக் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் 10 நாட்கள் வெறியுடன் காத்திருந்து இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்தியதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். அத்துடன் ஆர்சிபி அணியை பார்த்து தாங்களும் தொடர்ச்சியாக வென்று வேகமாக செயல்பட விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“தன்னம்பிக்கையை விட களத்தில் சென்று நான் பேட்டிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் கடைசியாக நாங்கள் மே 11ஆம் தேதி விளையாடினோம். எங்களுடைய திறமையை இப்போட்டியில் காண்பிப்பதற்காக பசியுடன் காத்திருந்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. இந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் எங்களுடைய பவுலர்களை சேரும். ஏனெனில் அவர்கள் எதிரணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்”
“இது போன்ற தொடரில் வேகம் மிகவும் முக்கியமானது. ஆர்சிபி அவர்களின் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வேகத்தை பெறுவதை நாங்கள் பார்த்தோம். எனவே நாங்களும் அதே வேகத்தை விரும்பினோம். ஆனால் இடையே மழை வந்ததால் கொஞ்சம் ஏமாற்றத்தை சந்தித்தோம். இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த எங்களுக்கு அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களிடம் நிறைய ஆதரவு கிடைக்கிறது”
இதையும் படிங்க: அபிஷேக் – ஹெட்டை பிரிச்ச திட்டம் இது தான்.. அந்த 2 இந்திய பையன்களிடம் திறமை இருக்கு.. ஸ்டார்க் பேட்டி
“இன்றிரவு எங்களுக்கு ஷாருக்கான் மற்றும் ஜெய் சார் ஆதரவு கொடுத்தனர். ஐபிஎல் ஃபைனல் போன்ற போட்டியில் விளையாடுவது எங்களைப் போன்ற வீரர்களுக்கு எப்போதுமே கனவாகும். சென்னையில் நடைபெறும் அந்தப் போட்டிக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் உள்ள அதே வேகத்தில் நீங்கள் அங்கு சென்று விளையாட விரும்புவீர்கள். ரிங்கு சிங் முக்கிய இடங்களில் நின்று முக்கியமான கேட்ச்களை பிடித்தார். அதே போல ஃபைனலில் சென்று நாங்கள் விளையாட உற்சாகத்துடன் இருக்கிறோம்” என்று கூறினார்.