உள்ளூர் போட்டியில் தலையில் காயமடைந்த இந்திய வீரர் – ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு, நடந்தது இதோ

Venkatesh Iyer
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் ட்ராபியின் நாக்-அவுட் சுற்று போட்டிகள் தமிழகத்தின் சென்னை, புதுச்சேரி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் செப்டம்பர் 15ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் ஜோன் மற்றும் சென்ட்ரல் ஜோன் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற சென்ட்ரல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் தன்னுடைய முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரிதிவி ஷா 60 (78) ரன்களும் ராகுல் திரிபாதி 67 (151) ரன்களும் எடுக்க சென்ட்ரல் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சென்ட்ரல் வெஸ்ட் அணியின் தரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கரண் சர்மா 34 ரன்கள் எடுக்க சென்ட்ரல் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட் மற்றும் டனுஷ் கோடின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 129 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இன்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 130/3 ரன்கள் குவித்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

- Advertisement -

வெங்கடேஷ் படுகாயம்:
அந்த அணிக்கு பிரிதிவி ஷா அதிரடியாக 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 104* (96) ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முன்னதாக இப்போட்டியில் சென்ட்ரல் அணிக்காக விளையாடி வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் தன்னுடைய அணிக்காக முதல் இன்னிங்ஸில் 66/5 என்ற மோசமான நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அப்போது அதிரடியான சிக்சரை அடித்த அவர் அடுத்த பந்தில் சிங்கிள் ஓடிய போது அந்த குறிப்பிட்ட ஓவரை வீசிய பந்து வீச்சாளர் சிந்தன் கஜா பந்தை தடுத்து ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார்.

ஆனால் குறுக்கே வந்த வெங்கடேஷ் ஐயர் மீது வேகமாக எறியப்பட்ட பந்து துரதிரஷ்டவசமாக பின்தலை கழுத்தில் பட்டு பதம் பார்த்தது. அதனால் வலியை தாங்க முடியாமல் தவித்த அவர் களத்திலேயே சுருண்டு விழுந்தார். அதனால் பதற்றமடைந்த அனைத்து வீரர்களும் நடுவர்களும் அவரது அருகே சென்று என்னவாயிற்று என்று பார்த்த நிலையில் அதிகப்படியான காயத்தை சந்தித்த அவரால் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

- Advertisement -

மைதானத்தில் ஆம்புலன்ஸ்:
அதனால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி பெவிலியன் செல்லலாம் என்று முடிவெடுத்த போதிலும் அவரால் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு கடுமையான வலியை உணர்ந்தார். அதை கவனித்த அம்பயர் உடனடியாக மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை நேரடியாக மைதானத்திற்குள் வரவழைத்தார். அதைத் தொடர்ந்து அவரை சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான வேலைகள் துவங்கியது. இருப்பினும் அதற்குள் வலி குறைந்ததாக உணர்ந்த அவர் இதர வீரர்கள் உதவியுடன் எழுந்து நடந்து பெவிலியன் திரும்பியதால் ஆம்புலன்ஸ் வெளியே அனுப்பப்பட்டது.

இதை பார்த்த ரசிகர்கள் பதற்றமடைந்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர் தேவையான முதலுதவிகளை எடுத்துக் கொண்டு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்தார். அதிர்ஷ்டவசமாக வலி நிவாரணிக்கு கட்டுப்படும் அளவுக்கு பெரிய அளவில் காயத்தை சந்திக்காத காரணத்தால் ஓய்வுக்குப் பின் மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்த அவர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தத்தில் பெரிய அளவில் காயத்தை சந்திக்காத அவர் மீண்டும் விளையாடியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

கடந்த 2021 ஐபிஎல் தொடரில் துபாயில் நடைபெற்ற 2வது பாகத்தில் அற்புதமாக எழுச்சி கண்டு பைனல் வரை முன்னேறுவதற்கு கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமானார். இருப்பினும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள  முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் மீண்டும் சுமாராக செயல்பட்டதால் கொல்கத்தா பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement