
மும்பையில் நேற்று நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 248 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் குவித்தார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியை துல்லியமாக பவுலிங் செய்த இந்தியா 10.3 ஓவரில் 97க்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 55 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு மொத்தம் 14 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து மிகவும் வலுவான டாப் அணி என்று தெரிவிக்கும் வருண் அவர்களுக்கு எதிராக தொடர்நாயகன் விருது வென்றது தம்முடைய சிறந்த செயல்பாடு என்று தெரிவித்துள்ளார். இத்தொடரில் ஃபீல்டர்களை வைத்து விக்கெட்டுகளை எடுக்கவும் தமது ஃபீல்டிங்கை முன்னேற்றவும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததாகவும் வருண் கூறியுள்ளார்.
அதே சமயம் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற இன்னும் தாம் முன்னேறுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு. “ஃபீல்டிங் துறையும் கொஞ்சம் பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய அணி அந்த துறையில் உயர்தரத்தை எட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. நான் எங்களுடைய ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் அவர்களுடன் கடினமாக வேலை செய்வேன்”
“அது களத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சி. இது நான் பந்து வீசிய மிகவும் சிறந்த தொடர். ஆனால் இன்னும் முன்னேறுவதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. சில பந்துகள் மிகவும் நெருக்கமாக இருந்தது. அதை பவுலிங் செய்திருக்கக் கூடாது. அதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இங்கிலாந்து டாப் அணி. இவை அனைத்தும் சரியான பந்துகளை சரியான நேரத்தில் வீசுவதை பற்றியதாகும். அதற்காக நான் உழைத்து வருகிறேன்”
இதையும் படிங்க: குரு யுவ்ராஜ் சொன்னதை செஞ்சுட்டேன்.. இங்கிலாந்தை நொறுக்கிய திட்டம் பற்றி ஆட்டநாயகன் அபிஷேக்
“இந்த விருது ஸ்பெஷலானது. இதை நான் என்னுடைய மகன் மனைவி மற்றும் பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். மேலும் சூரியகுமார் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் எனக்கு கொடுத்த ஆதரவுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் தமிழக வீரரான வருண் கம்பேக் கொடுத்தது முதல் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது தமிழ்நாட்டு ரசிகர்களையும் பெருமையடைய வைக்கிறது.