
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்ற இந்தியாவை மூன்றாவது போட்டியில் தோற்கடித்த இங்கிலாந்து பதிலடி கொடுத்துள்ளது. அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து தக்க வைத்துக் கொண்டது. ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக பென் டக்கெட் 51, லியம் லிவிங்ஸ்டன் 43 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அசத்தினார். அடுத்ததாக சேசிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 145-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 40 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இப்போட்டியில் இந்திய அணி தோற்றாலும் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தாம் ஆட்டநாயகன் விருது வென்றாலும் முன்னேறுவதற்கு நிறைய வேலைகள் இருப்பதாக வருன் கூறியுள்ளார்.
மேலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தப் போட்டியில் இந்திய அணி முன்னேறுவதற்காக உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியை நாங்கள் வெல்லாதது சோகம். ஆனால் இது தான் கிரிக்கெட்டின் இயற்கை. இங்கிருந்து நகர்ந்து அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்”
“நாட்டுக்காக விளையாடும் போது நீங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை என்னால் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது. ஒரு ஓவர் ஸ்பெல் மட்டும் வீசுவதற்கு நான் புகார் சொல்ல மாட்டேன். ஏனெனில் பலமுறை நான் 4 ஓவர்களை கூட ஒன்றாக வீசியுள்ளேன். எனவே எனக்கு கொடுக்கப்படும் வேலையை நாட்டுக்காக செய்வதற்கு தயாராக உள்ளேன்”
இதையும் படிங்க: 16 போட்டிகள்.. 5 விக்கெட்ஸ்.. அஜந்தா மெண்டிஸை முந்திய வருண் புதிய உலக சாதனை.. இங்கிலாந்தை மடக்கிய இந்தியா
“ஃபிளிப்பர் பந்துகளில் கடினமாக உழைத்து வருகிறேன். அது நன்றாக வருகிறது. நடந்த போட்டியில் சொன்னதைப் போலவே இந்தப் போட்டியிலும் நான் நன்றாக பவுலிங் செய்திருக்கலாம். ஆனால் முன்னோக்கி செல்லும் போது நான் இன்னும் முன்னேறுவது அவசியமாகிறது” என்று கூறினார்.