
ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் தொடர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது. அத்தொடர் ஆசியக் கண்டத்தில் உள்ள வளர்ந்து வரும் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் நடைபெறுகிறது. அத்தொடரில் இந்தியா ஏ அணி தங்களது முதல் போட்டியில் அமீரகத்தை எதிர்கொண்டு 148 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 20 ஓவரில் 297/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச்சை தவற விட்ட அமீரக அணியை அடித்து நொறுக்கிய வைபவ் சூரியவன்சி 11 பவுண்டரி 15 சிக்சர்களை தெறிக்க விட்டு 144 (42) ரன்கள் குவித்தார். குறிப்பாக 32 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
அத்துடன் ஒரு தேசிய அணிக்காக இளம் (14) வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சூரியவன்சி படைத்தார். அவருடன் கேப்டன் ஜித்தேஷ் சர்மா 83* (32), நமன் திர் 34 (23) ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். அடுத்து விளையாடிய அமீரகத்தை 20 ஓவரில் 149/7 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஏ அணி எளிதாக வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சோயப் கான் 63 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 3, ஹர்ஷ் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இந்த வெற்றிக்கு சதத்தை அடித்த முக்கிய பங்காற்றிய சூரியவன்சி ஆட்டநாயகன் விருதை வென்றார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது டி20 கிரிக்கெட்டில் என்னுடைய இயற்கையான ஆட்டம். அதற்கு நான் ஆதரவளிக்க விரும்பினேன்”
“என்னை முதல் பந்தில் கேட்ச் தவற விட்டார்கள். அதற்காக என்னுடைய அதிரடியை நான் மாற்ற விரும்பவில்லை. ஏனெனில் சிறிய பவுண்டரியை கொண்ட இம்மைதானத்தில் நல்ல பிட்ச்சில் வெற்றி பெற நாங்கள் பெரிய ரன்கள் குவிப்பது அவசியம். எனவே என்னுடைய ஷாட்டுகளுக்கு நான் ஆதரவு கொடுத்து விளையாடினேன். சிறுவயதிலிருந்தே என்னுடைய தந்தை மிகவும் கண்டிப்புடன் என்னை வளர்த்தார்”
இதையும் படிங்க: அந்த பயமே பும்ராவுக்கு விக்கெட்ஸை அள்ளித் தருது.. அவர் தான் எல்லாருக்கும் ப்ளூபிரிண்ட்.. ஸ்டைன் பாராட்டு
“அப்போதெல்லாம் ஏன் இவர் இவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்? என்று நான் நினைப்பேன். ஆனால் அதன் பயன்கள் தற்போது களத்தில் வெளிப்படுவதால் அதற்கான காரணத்தை இப்போது தான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனது தந்தை என்னை வேறு பக்கம் திசை திரும்பவிடாமல் கடினமாக கவனத்துடன் உழைக்க வைத்தார். அதனால் என்னிடம் உள்ள அனைத்துக்கும் என்னுடைய அப்பாவுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். ரசிகர்கள் ஆதரவளிக்க வருவதால் எனக்கு வயதைப் பற்றி எந்த அழுத்தமும் இல்லை. களத்துக்கு வந்தப் பின் வெளிப்புற விஷயங்களில் மனதை வைக்காமல் பந்தில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடுகிறேன்” என்று கூறினார்.