சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 127 ரன்களுக்கு சுருண்டது.
வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய சாதனை :
பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான ராயல்ஸ் அணியானது 12.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது நேற்றைய போட்டியில் அவர் 15 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பட்டியலில் சுனில் நரேனுடன் அவர் இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை அதிவக அரைசதம் அடித்த வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்திலும், கே.எல் ராகுல், பேட் கம்மின்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாவது இடத்திலும் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வைபவ் சூரியவன்சி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : போட்டியின் ஆரம்பத்திலேயே லக் எனக்கு இருந்தது.. சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து – ரியான் பராக் மகிழ்ச்சி
அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் நேற்றைய போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் கடந்து தனிப்பட்ட முறையில் தனது சாதனையை தானே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



