இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டி முடிந்த கையோடு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
வரலாற்று சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி :
அந்த விருது நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி ஏராளமான விருதுகளை அள்ளினார். அதிலும் குறிப்பாக 15 வயதிலேயே அவர் ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி தனது முத்திரையை பதித்துள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் மட்டும் அவர் 15 போட்டிகளில் விளையாடி 776 ரன்களை அடித்திருந்தார். இதன் மூலம் 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வீரராக இதன்மூலம் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி இந்த தொடரில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களை அடித்த அவர் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும், மிகவும் மதிப்புமிக்க வீரராகவும் விருதுகளை பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதின் மூலம் அட்டகாசமான சாதனை நிகழ்த்திய – விராட் கோலி
அதோடு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர், எமர்ஜிங் பிளேயர் என இந்த ஒரே தொடரில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிய அவர் கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிசு தொகையையும் பெற்றுக்கொண்டார். இந்த விருது நிகழ்ச்சிக்குப் பிறகு தான் வாங்கிய விருதுகளையும் அவர் மைதானத்தில் வரிசையாக வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



