குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் குவித்தது.
2 ஆவது வீரராக விராட் கோலி நிகழ்த்திய சாதனை :
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 75 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதோடு மட்டுமின்றி ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அணில் கும்ப்ளேவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக அணில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். கடந்து 2009-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் அவர் பெற்ற ஆட்டநாயகன் விருது அவரது 38-வது வயது 219-ஆவது நாளில் கிடைத்தது.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியிடம் இப்படி இறுதிப்போட்டியில் தோற்க இதுவே காரணம் – சுப்மன் கில் வருத்தம்
இவ்வேளையில் அவருக்கு அடுத்து தற்போது அதிக வயதில் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி தனது 37 வது வயது 207 ஆவது நாளில் ஆட்டநாயகன் விருதினை வென்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார்.



