
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 15 வயது இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார். உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இவர் ஆடிய அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
மேலும் இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் ஆறு முக்கிய விருதுகளையும் வென்று அசத்தியிருந்தார். 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை விரைவில் இந்திய அணியில் சேர்த்து விளையாட வைக்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இவ்வேளையில் தற்போது இந்தியா ஏ அணிக்காக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு மேலும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.
அதாவது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய சீனியர் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 இந்திய சீனியர் அணியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேப்டனாக இருந்த சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். இந்த இரண்டு தொடர்களிலுமே இடம்பெற்றுள்ள அவர் நிச்சயம் ஏதாவது ஒரு போட்டியில் அறிமுகமாகும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார்.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் நீக்கம்.. ஐயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட – இந்திய அணி அறிவிப்பு
அதாவது சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி மிக இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார். இவ்வேளையில் தற்போது 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் அறிமுகமானால் சச்சின் சாதனையை முறியடித்து மிக இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.