IND vs AUS : மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடிய கவாஜா, இந்தியாவை சிதைத்து 43 வருட பிரம்மிக்க வைக்கும் புதிய சாதனை

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே 2004க்குப்பின் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. போதாக்குறைக்கு கேப்டன் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் போன்ற முக்கிய வீரர்கள் வெளியேறியதால் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்ற கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

Khawaja

- Advertisement -

அதனால் ஒய்ட் வாஷ் தோல்வியைத் தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பிளாட்டான பிட்ச்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி அந்த அணிக்கு உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட் 32 ரன்களில் அவுட்டானார்.

வரலாற்று சாதனை:
அதை தொடர்ந்து மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி போராடிய இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா முதல் நாளிலேயே சதமடித்து மிகப்பெரிய சவாலாக மாறினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது நாளிலும் 150 ரன்கள் கடந்து அசத்திய அவருக்கு நிகராக தனது பங்கிற்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் கேமரூன் கிரீன் 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Cameron Green 1

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 0, மிட்சேல் ஸ்டார்க் 6 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய அஷ்வின் இந்தியாவுக்காக போராடினாலும் மறுபுறம் தொடர்ந்து பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்து 400 ரன்கள் தாண்ட உதவிய உஸ்மான் கவஜா ஒரு வழியாக 21 பவுண்டரியுடன் 180 ரன்கள் குவித்து அக்சர் பட்டேலிடம் அவுட்டானார். இறுதியில் 9வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த நேதன் லயனை 34 ரன்களிலும் டோட் முர்பியை 41 ரன்களிலும் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

மொத்தத்தில் உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்துள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியில் வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே ஒரு சில அரை சதங்களை அடித்து வந்த உஸ்மான் கவாஜா இந்த போட்டியில் பிட்ச் பிளாட்டாக இருந்ததை பயன்படுத்தி அஷ்வின், அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய இந்திய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 180 ரன்கள் குவித்து இந்தியாவை தனது பொறுமையால் முதல் இன்னிங்ஸில் சிதைத்தார் என்றே சொல்லலாம்.

Khawaja

குறிப்பாக 422 பந்துகளை எதிர்கொண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் என்ற கிரகாம் யாலோப் அவர்களின் 43 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக சவாலான இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 400 பந்துகளை எதிர்கொண்ட முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பிரமிக்க வைக்கும் சாதனையும் உஸ்மான் காஜா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. உஸ்மான் கவாஜா : 422 பந்துகள் – அகமதாபாத், 2023*
2. கிரகாம் யாலோப் : 392 பந்துகள் – கொல்கத்தா, (ஈடன் கார்ட்னஸ்), 1979
3. ஸ்டீவ் ஸ்மித் : 361, ராஞ்சி, 2017

- Advertisement -

அது போக இந்திய மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. டீன் ஜோன்ஸ் : 210, சென்னை, 1986
2. மேத்தியூ ஹெய்டன் : 203, சென்னை, 2001
3. உஸ்மான் கவாஜா : 180, அகமதாபாத், 2023*
4. ஸ்டீவ் ஸ்மித் : 178*,, ராஞ்சி, 2017

இதையும் படிங்க:2 ஆம் நாள் ஆட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய ஆஸி வீரர்கள். காரணம் என்ன? – நிர்வாகம் அளித்த விளக்கம்

இதை தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இப்போட்டியில் வெல்லும் முனைப்புடன் பேட்டிங் செய்து வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 36/0 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Advertisement