
நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அமெரிக்கா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் போட்டியின் ஆரம்பத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அமெரிக்கா அணி 110 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்தியா இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெனாலிட்டி வழங்கப்பட என்ன காரணம் என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.
அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐசிசி புதிய விதியான “ஸ்டாப் கிளாக்” விதியை அமல்படுத்தியது. அதாவது ஒரு ஓவரை வீசி முடித்த பின்னர் அடுத்த ஓவரை 60 வினாடிக்குள் துவங்கிட வேண்டும். இந்த விதிமுறையை ஒரே போட்டியில் மூன்று முறைக்கு மேல் மீறினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
இதையும் படிங்க : 3.1 ஓவரில் உலக சாதனை பண்ணிருக்கோம்.. ஆஸ்திரேலியர்களை பற்றி கவலையில்ல.. எங்களோட வேலை இதான்.. பட்லர் பேட்டி
அந்த வகையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்கு எதிராக மூன்று முறைக்கு மேல் அமெரிக்க அணியானது பந்துவீச தாமதத்தை ஏற்படுத்தியதால் அவர்களுக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது. இந்த விதியின் மூலம் முதல் முறையாக பெனாலிட்டி பெற்ற அணியாக அமெரிக்க மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.