
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு அமெரிக்காவின் டாலஸ் நகரில் 11வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொண்ட அமெரிக்கா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வான் 9 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த உஸ்மான் கான் 3 ரன்களில் நடையை கட்டினார்.
போதாகுறைக்கு அடுத்ததாக அதிரடி காட்ட முயற்சித்த பகார் ஜமானும் 11 (7) ரன்னில் ஆட்டமிழந்ததால் 26/3 என பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது மறுபுறம் அதிரடியாக விளையாட வேண்டிய பாபர் அசாம் 20 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார். இருப்பினும் எதிர்ப்புறம் வந்த சடாப் கான் அதிரடியாக விளையாடி 40 (25) ரன்கள் விளாசி பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றி அவுட்டானார்.
இலவச 8 ஒய்ட்:
ஆனால் அடுத்ததாக வந்த அசாம் கான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த பந்திலேயே மறுபுறம் தடுமாறிய பாபர் அசாம் 44 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இப்திகார் அகமது 18 (14), சாகித் அப்ரிடி 23 (16) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக நேட்ராவல்கர் 2, கெஞ்சிக் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய அமெரிக்காவுக்கு ஸ்டீபன் டைலர் 12 (160 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் மோனக் பட்டேல் அடுத்ததாக வந்த ஆண்ட்ரீஸ் கவுஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். அந்த வகையில் இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அப்போது ஆண்ட்ரீஸ் ஹவுஸ் 35 (26) ரன்களில் ஹரிஷ் ரவூப் வேகத்தில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அரை சதமடித்து அசத்திய இந்திய வம்சாவளி வீரர் மோனக் பட்டேல் முகமது ஆமீர் வேகத்தில் 50 (38) ரன்கள் ஆட்டமிழந்தார். அதைப் பயன்படுத்திய பாகிஸ்தான் டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை உண்டாக்கியது. இருப்பினும் அப்போது அனைத்து குமார் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் முழுமூச்சுடன் போராடினர்.
அதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது ஹரிஷ் ரவூப்க்கு எதிராக அந்த ஜோடி 1, 1, 1, 6, 1, 4 என 14 ரன்கள் அடித்தது. குறிப்பாக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது இந்திய வம்சாவை வீரர் நிதீஷ் குமார் பவுண்டரி அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக முகமத் அமீர் வீசிய சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது.
குறிப்பாக ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் சுமாராக ஃபீல்டிங் செய்த பாகிஸ்தான் காரணமாக முகமது அமீர் 8 இலவச ஒய்ட் ரன்களை வழங்கி சொதப்பினார். அதைத் தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு நேத்ராவல்கர் 2 ஒய்ட் பந்துகளை போட்டாலும் பவுண்டரி அடித்த இப்திகார் அகமதை அவுட்டாக்கி மொத்தம் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து அமெரிக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: விராட், ரோஹித்திடம் பாபர் கத்துக்கணும்.. அந்த இந்திய வீரர் பாகிஸ்தானை வீழ்த்த வாய்ப்பிருக்கு.. ரசித் லதீப்
அதனால் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே அமெரிக்கா வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. அத்துடன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த முதல் உறுப்பு நாட்டு அணி என்ற உலக சாதனையையும் அமெரிக்கா நிகழ்த்தியது.