விராட், ரோஹித்திடம் பாபர் கத்துக்கணும்.. அந்த இந்திய வீரர் பாகிஸ்தானை வீழ்த்த வாய்ப்பிருக்கு.. ரசித் லதீப்

Rashid Latif 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானை ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா எதிர்கொள்கிறது. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு வருடம் கழித்து மோதும் இந்த போட்டிக்கு வழக்கம் போல உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஃபக்கார் ஜமான், சாகின் அப்ரிடி போன்ற தரமான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் நேற்று அமெரிக்காவிடம் தோற்று தடுமாறும் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பைகளில் சுமாராகவே செயல்பட்டு வருகிறது. மறுபுறம் 2021 துபாய் தோல்வியை தவிர்த்து டி20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

பாபர் கத்துக்கனும்:
அந்த வரிசையில் இம்முறை அமெரிக்க மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் கேப்டனாக அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் கற்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜூன் ஒன்பதாம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியின் மீது கவனம் இருக்கிறது. பாபர் அசாம் தற்போது அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் இருக்கிறார். ஏனெனில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதை விட இந்தியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் அவர்கள் அசத்த வேண்டும். எனவே அவர் அழுத்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்”

- Advertisement -

“அதை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அழுத்தத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியும். ஒரு பேட்ஸ்மேனாக பாபர் அசாம் சிறந்தவர். ஆனால் கேப்டனாக அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் எந்த பேட்ஸ்மேனுக்கும் சவாலை கொடுப்பார்”

“அவர் தான் இந்தியாவின் சிறந்த பவுலர். இந்தியாவின் வெற்றிக்கான சாவி. தற்போதைய ஃபார்ம் மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் கண்டிப்பாக ஜூன் 9ஆம் தேதி இந்தியா வெற்றிக்கான சாதகத்தை கொண்ட அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் நன்றாக விளையாடக்கூடிய அணியாகும். ஆனால் 2021, 2022 போல தற்போது அவர்கள் சிறப்பாக தயாராகவில்லை. கடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் கேப்டன்ஷிப், தேர்வு, வீரர்கள் போன்ற பலவற்றில் நிறைய டேமேஜ் நடந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement