
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நிறைவு பெற்றது. அதில் ஏலம் போகாத நிறைய வீரர்களுக்கு மத்தியில் 26 வயதாகும் இந்திய வீரர் உர்வில் படேல் ஒருவராக ஏமாற்றத்தை சந்தித்தார். இத்தனைக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் ஹசாரே கோப்பையில் அவர் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக குஜராத்துக்காக 41 பந்துகளில் சதத்தை அடித்திருந்தார்.
அதன் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக வாங்கப்பட்டிருந்த அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் அவர் 30 லட்சம் அடிப்படை விலையில் கலந்து கொண்டார். ஆனால் இம்முறை அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அந்த சூழ்நிலையில் இந்தியாவில் சயீத் முஷ்டாக் அலி 2024 உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
அதில் நவம்பர் 27ஆம் தேதி இந்தூரில் குஜராத் மற்றும் திரிபுரா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய திரிபுரா 20 ஓவரில் 155-8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக நக்வஸ்வாலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக 156 ரன்களை துரத்திய குஜராத்துக்கு உர்வில் படேல் திரிபுரா பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல பட்டாசாக விளையாடிய அவர் 7 பவுண்டரி 12 சிக்சருடன் சதமடித்து 113* (35) ரன்களை 322.86 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் ஆர்யா தேசாய் அதிரடியாக விளையாட முயற்சித்து 38 (24) ரன்கள் எடுத்தார்.
அதனால் 10.2 ஓவரிலேயே 156-2 ரன்கள் குவித்த குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்படி என்னையா ஏலத்தில் எடுக்கவில்லை என்ற வகையில் இப்போட்டியில் விளையாடிய உர்வில் படேல் ஐபிஎல் அணிகளுக்கு பதிலடி கொடுத்தார் என்று சொல்லலாம். அதை விட இந்த போட்டியில் அவர் 28 பந்துகளில் சதத்தை அடித்தார்.
இதையும் படிங்க: தோனி பாயை மிஸ் பண்ணுவீங்களா? மும்பைக்கு வாங்கப்பட்ட சஹர்.. ரெய்னாவுக்கு ஏமாற்றமான பதில்
அதன் வாயிலாக டி20 அதிவேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சகில் சௌஹான்: 27 பந்துகள், சைரஸ் அணிக்கு எதிராக, 2024
2. உர்வில் படேல்: 28 பந்துகள், திரிபுராவுக்கு எதிராக, 2024*
3. கிறிஸ் கெயில்: 30 பந்துகள், புனேவுக்கு எதிராக, 2013
4. ரிஷப் பண்ட்: 30 பந்துகள், ஹிமாச்சலப்பிரதேசத்துக்கு எதிராக, 2018