- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மீண்டும் யாராவது காயமடையனுமா – கேப்டன் ரோஹித் சர்மாவ விளாசும் சுனில் கவாஸ்கர், காரணம் இதோ

ஆஸ்திரேலியாயில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்று முடிந்து முக்கியமான சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதியான இன்று துவங்கியது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியான நாளை மெல்போர்ன் நகரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறுகிறது. எல்லை பிரச்சினை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதும் நிலையில் கடைசியாக துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்ற வந்த இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்து பாகிஸ்தான் சரித்திரம் படைத்தது.

அதைவிட அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த பாகிஸ்தான் இந்தியாவை பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பியது. எனவே அந்த தோல்விகளுக்கு இம்முறை பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்காக முன்னதாகவே பயணித்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற 2 பயிற்சி போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த இந்தியா ஐசிசி நடத்திய அதிகாரபூர்வ பயிற்சி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

தேவையில்லாத பயிற்சி:
அதை தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் நியூசிலாந்தை கடைசி பயிற்சி கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்ள காத்திருந்த இந்தியாவை மழை தடுத்தது. அதனால் பாகிஸ்தான் போட்டி நடைபெறும் மெல்போர்ன் நகருக்கு பயணித்த இந்திய அணியினர் அக்டோபர் 21, 22 ஆகிய 2 நாட்களாக மீண்டும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போட்டியிலும் 80% மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் பரம எதிரியான பாகிஸ்தானை குறிப்பாக ஷாஹீன் அஃப்ரிடி திரும்புவதால் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையான பயிற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஏற்கனவே 3 பயிற்சி போட்டிகளில் விளையாடி தேவையான பயிற்சிகளை எடுத்துள்ள இந்திய அணியினர் கடைசி நேரத்தில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடாமல் இப்படி மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பது எந்த பலனையும் கொடுக்காது என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் முதல் போட்டியின் முதல் நாளன்று இதேபோல் செய்த பயிற்சியால் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்து விலகினார். மேலும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக கடைசி நேரத்தில் செய்யப்பட்ட வலைப்பயிற்சியில் தீபக் சஹர் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அதே போல் இம்முறையும் கடைசி நேரத்தில் யாராவது காயமடைந்தால் என்ன செய்வது என்று கவலை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இதற்காக என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் கடைசி பயிற்சி போட்டி மழையால் ரத்தான பின் மெல்போர்ன் வந்துள்ள நீங்கள் ஒருநாள் ஓய்வெடுக்காமல் மீண்டும் பயிற்சி எடுப்பது ஏன்?”

“இதுபோன்ற கடைசி நேரப் பயிற்சியில் ஈடுபடாத வீரர்களே போட்டி நாளன்று மேட்ச் வின்னர்களாக செயல்படுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு அணியாக போட்டிக்கு பார்முடன் செல்ல விரும்புகிறீர்கள். அதற்காக வீரர்கள் ஓய்வெடுப்பதற்கு இல்லை – இல்லை என்ற பதிலை கொடுக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு நிலைமை இருக்கக் கூடாது. இதுபோன்ற வலை பயிற்சிகளைப் பற்றி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் சமீப காலங்களில் இது இந்திய கிரிக்கெட்டை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்” என்று கூறினார்.

அதாவது எந்நேரமும் பயிற்சி பயிற்சி என்றில்லாமல் போட்டி நாளுக்கு முதல்நாள் ஓய்வெடுத்தால் மட்டுமே வீரர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாட உதவும் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் வேண்டுமானால் போட்டி துவங்குவதற்கு முன்பாக ஒருசில மணி நேரங்கள் கடைசிகட்ட பயிற்சிகளை செய்து கொள்ளலாமே என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -
Published by