மிகவும் அரிதான வைரம் உங்களுக்கு கிடைச்சுருக்கு விட்ராதிங்க, இளம் வீரரை பாராட்டிய டாம் மூடி – இந்திய அணிக்கு கோரிக்கை

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி 15ஆம் தேதியன்று சம்பிரதாய கடைசிப் போட்டியில் விளையாடுகிறது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை நட்சத்திர வீரர்கள் விளையாடும் இத்தொடரில் சுப்மன் கில், சிராஜ் போன்ற இளம் வீரர்களும் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக பவுலிங் ரன் மெஷின் என்று ஆரம்பத்தில் ரசிகர்களால் கிண்டல்களுக்கு உள்ளான உம்ரான் மாலிக் தன்னுடைய 2வது வாய்ப்பில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தொடர்ந்து 140 – 150 கி.மீ வேகத்தில் வீசி அப்போதைய கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரது பாராட்டுகளை பெற்றார். அதனால் ஹைதராபாத் அணியில் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் 2022 சீசனில் முழுமையான வாய்ப்புகளை பெற்று 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்திலான பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக வரலாற்று சாதனை படைத்தார். அதனால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டும் நம்பி ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் சேர்க்கப்படவில்லை.

Umran-Malik

இந்தியாவின் வைரம்:
இருப்பினும் உலகின் மிகவும் வேகமான சூப்பர் காரை இந்தியா கோட்டை விட்டதாக பிரெட் லீ, வாசிம் ஜாபர் போன்ற ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய காரணத்தால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள உம்ரான் மாலிக் வேகத்துடன் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரின் போது டி20 (155 கி.மீ) மற்றும் ஒருநாள் (156 கி.மீ) கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக வரலாற்று சாதனை படைத்த அவர் தமக்கு தொடர்ந்து வாய்ப்பும் ஆதரவும் பயிற்சியும் கொடுத்தால் அசத்துவேன் என்பதை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் 150 கி.மீ வீசும் பவுலர் கிடைப்பது அரிது என்று தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி வைரமாக கிடைத்துள்ள உம்ரான் மாலிக்க்கு தேவையான வாய்ப்பு கொடுத்து பொறுமையாக காத்திருந்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக முதல் முறையாக உம்ரான் மாலிக் திறமையை அருகிலிருந்து பார்த்த அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணி அவரை அரவணைப்பதை பார்த்து எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மேலும் அவர் மிகுந்த உயர் மட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். இங்கு தான் அவர் அதிகமாக கற்றுக் கொள்ளப் போகிறார். மேலும் அதிக செயல் திறன் கொண்ட சூழலில் அனைத்து இளம் வேகப்பந்து வீச்சாளர்களைப் போலவே அவரும் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இருப்பினும் அவர் முழுமையாக முன்னேறுவதற்கு சற்று நேரம் எடுக்கும் என்பதால் கொஞ்சம் பொறுமை வேண்டும்”

இதையும் படிங்க: விபத்தால் ஏற்பட்ட பரிதாபம். கரியரில் பெரிய பின்னடைவை சந்திக்கவுள்ள ரிஷப் பண்ட் – இது வேறயா?

“ஆனால் அவர் ஒரு அரிய வைரம். பொதுவாக 180 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை நீங்கள் அரிதாகவே காண முடியும். என்னை பொறுத்த வரை என்னிடம் அவரை போன்ற ஒரு கிறிஸ்டல் பந்து இல்லை. இந்த நேரத்தில் அவரது வளர்ச்சியில் சிறிய அசைவும் மிகவும் முக்கியமாகும். குறிப்பாக டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை ஒருங்கிணைப்பது முக்கியம் என்பதை இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் உணர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement