மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூருவுக்கு இளம் தொடக்க வீரர் அனுஜ் ராவத் 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 7/2 என முதல் ஓவரியிலேயே பின்னடைவை சந்தித்த பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கிளன் மேக்ஸ்வெல் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 23 (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த நேரத்தில் களமிறங்கிய பிரபுதேசாய் 10 (9) ரன்களில் நடையை கட்ட 62/4 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற பெங்களூரு ஆரம்பத்திலேயே திண்டாடியது. இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் டு பிளசிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருடன் கைகோர்த்த இளம் வீரர் சபாஸ் அஹமத் தனது பங்கிற்கு தேவையான ரன்களை எடுத்தார்.
அசத்திய டு பிளேஸிஸ்:
5-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் பேட்டிங் செய்த இந்த ஜோடி 70 ரன்கள் குவித்து தங்களது அணியை மீட்டெடுத்த போது சபாஷ் அஹமது 26 (22) ரன்களில் ரன் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நிலைத்து நின்ற டு பிளேஸிஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்து 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 64 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி ஓவரின் 5-வது பந்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். அவரின் அற்புதமான ஆட்டத்தால் தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 183/6 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 182 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 (5) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மனிஷ் பாண்டே பொறுப்பில்லாமல் 6 (8) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் கேப்டன் கேஎல் ராகுலும் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 30 (24 )ரன்கள் எடுத்து அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த லக்னோவுக்கு அடுத்ததாக களமிறங்கிய க்ருனால் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்து 5 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (28) ரன்கள் எடுத்து வெற்றிக்கான நம்பிக்கை கொடுத்து ஆட்டமிழந்தார்.
லக்னோ போராடி தோல்வி:
அவருடன் மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்க வேண்டிய இளம் வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் தலா 13 ரன்களில் அவுட்டானதால் லக்னோவின் தோல்வி உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 24 (15) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். அந்த நேரம் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ஹோல்டரும் கடைசி ஓவரில் 16 (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 163/8 ரன்களை மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது.
இதன் காரணமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்த பெங்களூரு இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த அபாரமான வெற்றிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 4 எடுத்து முக்கிய பங்காற்றினார். இருப்பினும் பேட்டிங்கில் பெங்களூரு சரிந்த போது 96 ரன்கள் குவித்து தூக்கி நிறுத்திய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சர்ச்சையான முடிவு:
மறுபுறம் பந்துவீச்சில் கடைசி நேரத்தில் சொதப்பிய லக்னோ பேட்டிங்கில் ஆரம்பம் முதலே தடுமாறி இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்த அணி 135/6 என தடுமாறியபோது களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மர்கஸ் ஸ்டாய்நிஸ் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிக்காக போராடினார். அதிலும் 19-வது ஓவரை வீசிய ஜோஸ் ஹேசல்வுட் அந்த ஓவரின் முதல் பந்தை கிட்டதட்ட ஒய்ட் போல வீச முயன்ற போதிலும் அது பேட்ஸ்மேனை நெருங்கியபோது ஒய்ட் பந்துகளை அடையாளம் காட்டும் நீல வண்ண கோட்டை தாண்டி பிட்ச் முடியும் இடத்தை அடையாளம் காட்டும் வெள்ளை கோட்டையும் தாண்டி சென்றது.
கிரிக்கெட் அடிப்படை விதிமுறைப்படி அது ஒயிட் மட்டுமல்லாது பிட்ச்சை தாண்டி சென்றதால் நோபால் என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதை அடிப்பதற்காக ஸ்டோனிஸ் சற்று வலது புறமாக நகர்ந்ததால் அதை அம்பயர் கிறிஸ் கேப்ணி ஒய்ட் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டோனிஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் 2-வது பந்தையும் கிட்டத்தட்ட அதே போல வீசுவார் என எதிர்பார்த்த ஸ்டோனிஸ் அதற்கு ஏற்றாற்போல் பந்து பிட்ச் ஆவதற்கு முன்பாகவே சற்று வலப்புறமாக நகர்ந்து சிக்சர் அடிக்க முயன்ற நிலையில் ஸ்டம்புகளை காட்டியதால் அதை பயன்படுத்தி ஹேசல்வுட் அவரை கிளீன் போல்ட்டாக்கினார்.
அதனால் கடுப்பான ஸ்டோனிஸ் கடும் கோபத்துடன் அம்பயரை திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். இதைப் பார்த்த பல ரசிகர்களும் இதுபோன்ற முடிவை கொடுத்த அம்பயரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்க்கின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் இதுவரை கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச் தரையில் பட்டது, எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்டது போன்ற நிறைய தவறான தீர்ப்புகளை அம்பயர்கள் வழங்கியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலி 2 மாசம் ரெஸ்ட் எடுத்தே ஆகனும். ஏன் தெரியுமா? – ரவி சாஸ்திரி கொடுத்த விளக்கம்
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் இந்த வருட ஐபிஎல் தொடரில் அம்பயர்களுக்கு என்ன ஆயிற்று என்று டுவிட்டரில் விளாசியுள்ளார்.