NZ vs SL : நாங்க ஒன்னும் பண்ண முடியாது, நியாயமான அவுட்டை கொடுக்காமல் அடம் பிடித்த அம்பயர்கள் – நடந்தது என்ன

Run Out Bails
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து கைப்பற்றிய நியூசிலாந்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக முதல் போட்டியில் கடைசி பந்து வரை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அந்த அணி ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃ.பைனலுக்கு இந்தியா தகுதி பெற உதவி செய்தது. அதனால் இந்திய ரசிகர்கள் நேரடியாக அந்த அணிக்கு நன்றி தெரிவித்த நிலையில் 2வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இலங்கை ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தது.

அந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. மார்ச் 25ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49.3 ஓவரில் ஆல் அவுட்டானாலும் 274 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பேட்டரி போய்டுச்சு:
அந்த அணிக்கு ஃபின் ஆலன் 51, ரச்சின் ரவீந்திரா 49, டார்ல் மிட்சேல் 47 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் தேவையான ரன்களை எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக சமிகா கருணரத்னே 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 275 ரன்களை துரத்திய இலங்கை நியூசிலாந்தின் அதிரடியான ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் வெறும் 76 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 18 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஹென்றி ஷிப்லே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனால் 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த இலங்கை ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அப்படி ஒருதலை பட்சமாக நடைபெற்ற இந்த போட்டியில் 275 ரன்களை துரத்திய இலங்கைக்கு ப்ளாக் டிக்னர் வீசிய 18வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட இலங்கை வீரர் சமிகா கருணரத்னே அதை அருகிலேயே அடித்து விட்டு வேகமாக ஓடி டைவ் அடித்து டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்தார்.

- Advertisement -

அப்போது நியூஸிலாந்து ஃபீல்டர்கள் வேகமாக செயல்பட்டு தம்மிடம் கொடுத்த பந்தை பிடித்த ப்ளாக் டிக்னர் ஸ்டம்பில் அடித்து அவுட் கேட்டார். அதைத்தொடர்ந்து அதை 3வது நடுவர் பெரிய திரையில் சோதித்த போது சமிகா கருணரத்னே டைவ் அடித்து வெள்ளைக்கோட்டை தொடுவதற்கு 1 இன்ச் இடைவெளிக்கு முன்பாகவே ப்ளாக் டிக்னர் பந்தை ஸ்டம்ப்பில் சரியாக அடித்தது தெரிய வந்தது. அதனால் 3வது நடுவர் அவுட் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த சமயத்தில் அகற்றப்பட்ட பெய்ல்ஸில் இருந்த மின் விளக்குகள் எரியவில்லை.

அதன் காரணமாக அது அவுட் இல்லை என்று 3வது நடுவர் அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக பேட்டரி போய் விட்டது அதனால் நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது என்பது போல அம்பயர்கள் நடந்து கொண்டது ரசிகர்களை கிண்டலடிக்க வைத்துள்ளது. ஆரம்பக் காலங்களில் வெறும் மரத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டம்ப்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்படும் ரன் அவுட்டை எவ்வளவு சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காகவே மின் விளக்குகளுடன் கூடிய ஸ்டம்ப்கள் நவீன கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க:வீடியோ : ஒருநாள் போட்டியிலும் இலங்கையை ஓடவிட்ட நியூஸிலாந்து – அபார வரலாற்று சாதனை வெற்றி

ஆனால் அதிலும் இப்படி பெய்ல்ஸ் கீழே விழுந்தும் பேட்டரி இல்லாததால் மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அவுட் கொடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு அடிப்படை விதிமுறையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Advertisement