வீடியோ : ஒருநாள் போட்டியிலும் இலங்கையை ஓடவிட்ட நியூஸிலாந்து – அபார வரலாற்று சாதனை வெற்றி

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் போட்டியில் கடைசி பந்து வரை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து திரில் வெற்றி பெற்றதால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 4வது போட்டியில் ட்ராவை சந்தித்தும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது. அதனால் நியூசிலாந்துக்கு இந்திய ரசிகர்கள் நேரடியாகவே நன்றி தெரிவித்த நிலையில் 2வது போட்டியில் இன்னிங்ஸ் இன்னும் தோல்வியை சந்தித்த இலங்கை பரிதாபமாக தொடரை இழந்தது.

அதனால் ஏமாற்றமடைந்த இலங்கை வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க்கும் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49.3 ஓவரில் ஆல் அவுட்டானாலும் 274 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

அபார சாதனை வெற்றி:
அந்த அணிக்கு ஃபின் ஆலன் 51 (49), டார்ல் மிட்சேல் 47 (58), கிளன் பிலிப்ஸ் 39 (42), ரச்சின் ரவீந்திரா 49 (52) என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக சமிக்கா கருணரத்னே 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 275 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை நியூசிலாந்தின் தரமான ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரிலேயே வெறும் 76 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.

அந்த அணிக்கு பதும் நிசாங்கா 9, பெர்னாண்டோ 4, குஷால் மெண்டிஸ் 0, ஏஞ்சலோ மேத்யூஸ் 18, சரித் அசலங்கா 9, கேப்டன் தசுன் சனாகா 0, சமிகா கருணரத்னே 11 என முக்கிய வீரர்கள் அனைவரும் முடிந்தளவுக்கு போராடியும் 20 ரன்களை தாண்ட முடியாமல் ஆட்டமிழந்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஹென்றி சிப்லே 5 விக்கெட்டுகளையும் ப்ளாக் டிக்னர் மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதனால் 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு டுனிடின் மைதானத்தில் நடைபெற்ற 6வது ஒருநாள் போட்டியில் 316 ரன்களை துரத்திய இலங்கையை 195 ரன்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். மேலும் கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து மீண்டும் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து அசத்தியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மறுபுறம் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பிய இலங்கை ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை (76 ஆல் அவுட்) பதிவு செய்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க:இப்படி மோசமா விளையாடுனா இந்தியா எப்படி உலககோப்பையை ஜெயிக்கும்? – டேனிஷ் கனேரியா கருத்து

இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நியூசிலாந்தின் அதிரடியான பந்து வீச்சில் 35.2 ஓவரில் வெறும் 112 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய குறைந்தபட்ச சாதனை ஸ்கோராகும். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 28ஆம் தேதியன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement