வெறும் 2 ரன்ஸ்.. வரலாறு படைத்த உகாண்டா.. 27 வருட கனவை நிஜமாக்கி புதிய உலக சாதனை படைத்த 43 வயது வீரர்

Uganda
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 5ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் 9வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் பப்புவா நியூகினியா மற்றும் உகாண்டா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பப்புவா அணி ஆரம்பம் முதலே உகாண்டாவின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த வகையில் திணறலாக விளையாடிய பப்புவா அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு 11 பேட்ஸ்மேன்களும் 20 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக ஹிரி ஹிரி 15 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

43 வயதில் உலக சாதனை:
மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய உகாண்டா சார்பில் அதிகபட்சமாக அல்பேஷ் ரம்ஜாணி 2, கோஸ்மஸ் 2, ஜூமா மியாகி 2, பிராங்க் ந்சுபுகா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக இந்தப் போட்டியில் உகாண்டா அணிக்காக 43 வயதாகும் பிராங்க் ந்சுபுகா (நடுவில் இருப்பவர்) முதல் முறையாக உலகக் கோப்பையில் அறிமுகமாக விளையாடினார்.

அந்த வாய்ப்பில் 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றின் ஒரு போட்டியில் முழுமையாக வீசிய 4 ஓவரில் குறைந்த ரன்கள் (4) கொடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் அன்றிச் நோர்ட்ஜே 4 ஓவரில் 7 ரன்கள் மட்டும் கொடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

கடந்த 1997ஆம் ஆண்டு 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ந்சுபுகா கடந்த 27 வருடங்களில் 55 டி20 போட்டிகளில் விளையாடினார். இருப்பினும் ஒரு முறை கூட அவர் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு பெற்றதில்லை. ஆனால் இந்த உலகக்கோப்பை அறிமுக போட்டியில் தமக்குள் வைத்திருந்த மொத்த திறமையும் வெளிப்படுத்திய அவர் தனித்துவமான உலக சாதனை படைத்து கனவை நிஜமாகியுள்ளார்.

இதையும் படிங்க: ஏதோ ஒரு ஆசிய அணி தான் டி20 உ.கோ தட்டித் தூக்கும்.. அதை இந்தியா ஜெயிக்க இதை செய்யனும்.. தில்சான் பேட்டி

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 78 ரன்களை துரத்திய உகாண்டா அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய ரிசாஷ் அலி ஷா 33 (56) ரன்களும் ஜூமா மியாகி 13* (16) ரன்களும் எடுத்து 18.2 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதன் வாயிலாக 50 ஓவர் அல்லது 20 ஓவர் என அனைத்து வகையான உலகக் கோப்பையிலும் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து உகாண்டா புதிய வரலாறு படைத்தது.

Advertisement