வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா விளையாடி வருகிறது. அந்தப் பயணத்தில் தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் அணியை இந்தியா தங்களுடைய 2வது போட்டியில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற ஏதேனும் ஒரு ஆசிய அணி தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் திலகரத்னே தில்சான் உறுதியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆசிய சாம்பியன்:
அதில் மற்ற அணிகளை காட்டிலும் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு விராட் கோலியை போன்ற ஒருவர் மட்டும் போராடாமல் அனைத்து இந்திய வீரர்களும் சேர்ந்து அசத்தலாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தில்சான் பேசியது பின்வருமாறு.
“அனைத்து அணிகளுக்கும் இங்கே சவால் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் உலகின் டாப் அணிகள் அமெரிக்காவில் விளையாடியதில்லை. சூப்பர் 8 சுற்று துவங்கியதும் அனைத்து ஆசிய அணிகளும் சாதகத்தை பெறும். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். அது ஆசிய அணிகளுக்கு பெரிய சாதகத்தை கொடுக்கும்”
“இந்த டி20 உலகக் கோப்பையை ஒரு ஆசிய அணி தான் வெல்லும் என்று நான் உணர்கிறேன். விராட் கோலி தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் மேட்ச் வின்னிங் பிளேயர். ஆனால் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்க முடியாது. அனைவரும் வெற்றியில் பங்காற்ற வேண்டும். அனைத்து 3 துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும்”
இதையும் படிங்க: இது ஐபிஎல் ஹை-வே கிடையாது.. சாதாரணமா நினைக்காதீங்க.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த சாஸ்திரி
“இந்திய அணிக்கு கண்டிப்பாக வாய்ப்புகளும் சாதகமும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் இப்போது தான் ஐபிஎல் தொடரை முடித்தனர். விராட் கோலி வெற்றி பெற்று கொடுக்கக்கூடிய ஒரு வீரர். அவர் தன்னுடைய ஐபிஎல் ஃபார்மை இந்த உலகக் கோப்பையிலும் தொடர்வார்” என்று நம்புகிறேன். அந்த வகையில் தற்போதைய ஆசிய சாம்பியனாக இருக்கும் இந்தியா இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



