இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என்று உறுதியான தகவல் வெளியாகியது.
இந்த அறிவிப்பின் காரணமாக தற்போது ஐபிஎல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்திய அணி இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கும் இவ்வேளையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதில் கவனத்தை செலுத்தி வருகிறது.
மேலும் அதில் முதல்கட்டமாக தற்போது இந்த ஐபிஎல் தொடரில் 50 சதவீத பார்வையாளர்களை மைதானத்தில் அனுமதிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்படி போட்டியை கண்டுகளிக்க வரும் 50 சதவீத ரசிகர்கள் அனைவரும் கோரோனோ தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறையை மட்டும் அவர்கள் கடைப்பிடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பார்வையாளர்கள் 50 சதவீதம் பேர் ஐபிஎல் தொடர் முழுவதையும் நேரில் கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் முழுவதும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற வேளையில் தற்போது இந்தாண்டு 50% பார்வையாளர்களுடன் இந்த தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.