UAE vs NZ : இந்தியாவை தெறிக்க விடும் நியூசிலாந்தை அசால்ட்டாக அடித்து நொறுக்கிய அமீரக அணி – இரட்டை சரித்திர சாதனை வெற்றி

NZ vs UAE Mark Chapman
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் அமீரகம் கத்துக்குட்டி அணியாக கருதப்படுவதால் கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் டிம் சௌதீ தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கிய நியூசிலாந்து எதிர்பார்க்கப்பட்டது போலவே முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

UAE vs NZ Tim Southee

- Advertisement -

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு கிறிஸ் பௌஸ் 21 (21), டிம் சைஃபர்ட் 7 (6), மிட்சேல் சாட்னர் 1 (4), க்ளேவர் 0, மெக்கொன்சி 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 65/5 என சரிந்த அந்த அணியை 6வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று காப்பாற்ற போராடிய மார்க் சேப்மேனுடன் ஜோடி சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜிம்மி நீசம் போராடி 21 (17) ரன்களில் ஆட்டமிழந்தார்.

சரித்திர வெற்றி:
அதே போல மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சேப்மன் அரை சதமடித்து 3 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (46) ரன்கள் விளாசி ஓரளவு காப்பாற்றினார். இருப்பினும் 20 ஓவர்களில் நியூசிலாந்து 142/8 ரன்கள் மட்டுமே எடுக்கும் அளவுக்கு பந்து வீச்சில் தரமாக செயல்பட்ட அமீரகம் சார்பில் அதிகபட்சமாக அப்சல் கான் 3 விக்கெட்டுகளையும் ஜாவத் உள்ளா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 143என்ற இலக்கை துரத்திய அமீரகத்திற்கு கேப்டன் டிம் சௌதீ வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஆர்யன்ஸ் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

chapman 2

இருப்பினும் அடுத்ததாக வந்த அரவிந்த் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் வாசிமுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 25 (21) ரன்களில் கெய்ல் ஜெமிசன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அவரை விட மறுபுறம் தொடர்ந்து சரவெடியாக விளையாடிய கேப்டன் முகமது வாசிம் 4 பவுண்டரி 3 சிக்சரை அடித்து 55 (29) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிந்தார்.

- Advertisement -

அவருடன் தனது பங்கிற்கு 3வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆசிப் கான் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 48* (29) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். கூடவே ஹமீத் 12* (12) ரன்கள் எடுத்ததால் 15.4 ஓவர்களிலேயே 144/3 ரன்கள் எடுத்த ஐக்கிய அரபு நாடுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலுவான அணியாக கருதப்படும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

UAE 2

அது போக 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பைகளை வென்று ஐசிசி தொடர்களில் இந்தியாவையே அசால்டாக தெறிக்க விட்டு வரும் நியூசிலாந்தை தோற்கடித்த முதல் உறுப்பு நாடுகள் அணி என்ற மாபெரும் சரித்திரத்தையும் அமீரகம் படைத்துள்ளது. அதாவது ஸ்காட்லாந்து, அமீரகம், சிங்கப்பூர், நேபாள், அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணிகள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல ஐசிசியின் முழு அந்தஸ்தை பெறாமல் உறுப்பு நாடுகளாக மட்டுமே கருதப்படுகின்றன.

இதையும் படிங்க:ஒரு இளம் வீரரின் கேரியரை இப்படியா கெடுப்பீங்க? இங்கிலாந்தை விளாசும் கெவின் பீட்டர்சன் – டிம் பைன், காரணம் இதோ

அந்த வகையில் சிங்கப்பூர், நேபாள், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து போன்ற உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் வலுவான நியூசிலாந்தை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக தோற்கடித்த முதல் அணி என்ற சரித்திரத்தை அமீரகம் படைத்துள்ளது. துபாயில் சேசிங் செய்யும் அணிகள் எளிதாக வெல்வதை ஐபிஎல் தொடரில் பார்த்த நிலையில் அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி இந்த போட்டியில் நியூசிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் அமீரகம் வீழ்த்தியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement