
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நாளை நவம்பர் 24-ஆம் தேதி மற்றும் நாளை மறுதினம் நவம்பர் 25-ஆம் தேதி என இரு நாட்கள் சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் கலந்துகொண்டு தங்களது தேவையான வீரர்களை வாங்க முயற்சிப்பார்கள் என்பதனால் இந்த ஏலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மஹேந்திர சிங் தோனி, மதீஷா பதிரானா, ஷிவம் துபே ஆகிய ஐந்து வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேவும் இம்முறை ஏலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியால் வாங்கப்படவில்லை என்றால் வேறு எந்த அணிக்காக விளையாட தனக்கு ஆசை என்பது குறித்த வெளிப்படையான சில கருத்துக்களை அவர் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணிக்காக நான் தேர்வு செய்யப்படவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் என்னுடைய சொந்த மாநில அணி மும்பை தான். எனவே சொந்த அணிக்காக சொந்த மக்கள் முன்னிலையில் விளையாட வேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கு இருக்கிறது.
எப்போதுமே சொந்த மண்ணில் சொந்த மக்களுக்கு மத்தியில் நாம் விளையாடுவது ஒரு வித்தியாசமான உணர்வு. ஏற்கனவே நான் சிஎஸ்கே அணிக்காக வான்கடே மைதானத்தில் இரண்டு முறை விளையாடியுள்ளேன். அப்போது நான் மஞ்சள் நிறத்தில் விளையாடி இருந்தாலும் மக்கள் என்னை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க : டேல் ஸ்டெயினுக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித்தை இப்படி வீழ்த்துன 2 பவுலர் பும்ரா தான் – கெத்து காட்டிய கேப்டன்
எனவே ஒருவேளை நான் சென்னை அணிக்காக விளையாட விட்டால் மும்பை அணிக்காக விளையாட ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே 42 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதில் 2023-ஆம் ஆண்டு 21 விக்கெட்டுகளையும், கடந்த ஆண்டு 17 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.