
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் துவங்கியுள்ளது. அத்தொடரில் ஜூன் 14ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு எம்ஐ நியூயார்க் அணி மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளின் கிளை அணிகளான அவ்விரு அணிகள் மோதிய போட்டி கலிபோர்னியா நகரில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 18 (15) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த முக்கமலா 5, டேரில் மிட்சேல் 8, மிலிண்ட் குமார் 19, டோனோவன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய துவக்க வீரர் டேவோன் கான்வே அரை சகத்தை அடித்தார்.
19 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடிய அவர் 65 (44) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய கல்வின் சாவேஜ் அரை சதத்தை அடித்து 53* (34) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் டெக்ஸாஸ் 185/6 ரன்கள் எடுத்தது எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வேல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய எம்ஐ அணிக்கு அக்னி சோப்ரா 5, டீ காக் 8, கேப்டன் நிக்கோலஸ் பூரான் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் மோனக் படேல் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி 38 (21) ரன்கள் குவித்து பெவிலியின் திரும்பினார்.
அடுத்ததாக வந்த கைரன் பொல்லார்ட் அடித்து நொறுக்கி 32 (16) ரன்கள் குவித்து அச்சுறுத்தலைக் கொடுத்தார். அப்போது ரன் அவுட்டாக்கிய டேரில் மிட்சேல் மறுபுறம் போராடிய மோனக் பட்டேலையும் 62 (43) ரன்னில் ரன் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார். அடுத்ததாக வந்த சன்னி படேல் 0, ட்ரெண்ட் போல்ட் 6 (3) ரன்னில் அவுட்டானார்.
இதையும் படிங்க: பும்ராவை இந்த சோதனையின் அடிப்படையில் தான் விளையாட வைக்க வேண்டும் – அஷ்வின் கருத்து
இறுதியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய டேரில் மிட்சேல் 5 ரன்களை மட்டுமே கொடுத்து எம்ஐ அணியை 20 ஓவரில் 182/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். குறிப்பாக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது 1 ரன் மட்டுமே கொடுத்த மிட்சேல் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடன் ஆடம் மில்னே 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.