தனி ஒருவனாக தூக்கிய கான்வே, பொல்லார்ட்டின் காட்டடி எம்ஐ அணியை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது எப்படி?

MLC 2
- Advertisement -

அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் டி20 என்ற புதிய கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 18ஆம் தேதி டாலஸ் நகரில் இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு நடைபெற்ற 7வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின. ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் போற்றப்படும் இவ்விரு நிர்வாகங்கள் அமெரிக்காவில் மோதிய இந்த போட்டியை பார்ப்பதற்கு இந்தியாவில் இருந்த ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் கேப்டன் டு பிளேஸிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டேவோன் கான்வே அதிரடியை துவங்கி விரைவாக ரன்களை சேர்த்தார். இருப்பினும் எதிர்ப்புறம் கேப்டன் டு பிளேஸிஸ் 8 (9) ரன்களில் ரபாடா வேகத்தில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கோடி செட்டி 12 (18) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து டேவோன் கான்வே சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதமடித்து அசத்திய நிலையில் எதிர்ப்புறம் 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 17 (15) ரன்களில் ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தனி ஒருவனாக அதிரடி காட்டிய டேவோன் கான்வே 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 74 (55) ரன்களில் ரசித் கான் சுழலில் அவுட்டாக அடுத்து வந்த ட்வயன் ப்ராவோ 5 (4) டேனியல் சாம்ஸ் 1 (4) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் இறுதியில் 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட மிட்சேல் சாட்னர் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான 27 (13) ரன்களை எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் டெக்ஸாஸ் 154/7 ரன்கள் எடுக்க எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் காகிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைத்தனர். அதைத்தொடர்ந்து 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய எம்ஐ அணிக்கு ஆரம்பத்திலேயே மோனக் படேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ஸ்டீவன் டெய்லர் 15 (21) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதைவிட அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானும் தடுமாற்றமாகவே செயல்பட்டு 19 (15) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அப்படி எதிர்ப்புறம் வந்த வீரர்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியதால் மறுபுறம் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் சயன் ஜஹாங்கிரும் 5 பவுண்டரியுடன் 41 (38) ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அதனால் 90/4 என சரிந்த எம்ஐ அணியின் வெற்றி கேள்விக்குறியான போது காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட கேப்டன் பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் மிகப்பெரிய அழுத்தத்திற்குள்ளான அந்த அணிக்கு கடைசி நேரத்தில் டிம் டேவிட் 24 (19) ஹமத் அசாம் 13 (12) ரசித் கான் 13* (9) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

ஏனெனில் அந்தளவுக்கு ஆரம்பம் முதலில் பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட டெக்சாஸ் அணி 20 ஓவர்களில் எம்ஐ அணியை 137/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 17 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. டெக்சாஸ் சார்பில் அதிகபட்சமாக முகமது மோசின் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை தொடரிலும் இவரால் விளையாட முடியாதாம். இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள – மிகப்பெரிய பின்னடைவு

அப்படி ஐபிஎல் தொடரில் நிர்வகிக்கும் மும்பையின் எம்ஐ அணியை இந்த அமெரிக்க தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் வீழ்த்தியது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த டெக்ஸாஸ் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. மறுபுறம் 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த எம்ஐ 3வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement