ஜாம்பவான் முரளிதரனின் ஆல் டைம் சாதனையை உடைத்த ட்ரெண்ட் போல்ட் – வித்யாசமான உலகசாதனை இதோ

Muralitharan Trent Boult
- Advertisement -

நியூஸிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 2இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் ஜோ ரூட் 115 ரன்கள் எடுத்த சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூன் 10-ஆம் தேதியன்று நாட்டிங்காம் நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய டார்ல் மிட்சேல் சதமடித்து 190 ரன்களும் அவருடன் பேட்டிங் செய்த டாம் ப்ளண்ட்ல் சதமடித்து 106 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் சொந்த மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்து 539 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

- Advertisement -

இங்கிலாந்து மாஸ்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஓலி போப் சதமடித்து 145 ரன்கள் எடுக்க முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தனது பங்கிற்கு 26 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 176 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்தை 2-வது இன்னிங்ஸ்சில் மேற்கொண்டு பெரிய ரன்கள் அடிக்க விடாமல் மடக்கிப் பிடித்த இங்கிலாந்து 284 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 62* ரன்களும் டேவோன் கான்வே 52 ரன்களும் வில் எங் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 299 ரன்கள் என்ற இலக்கை நேற்றைய 5-வது நாளின் கடைசி ஒருசில மணி நேரங்களில் வெறித்தனமாக துரத்திய இங்கிலாந்துக்கு டி20 இன்னிங்ஸை ஆடிய ஜானி பேர்ஸ்டோ 14 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 136* (92) ரன்களை 147.83 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வெற்றி உறுதி செய்த ஆட்டமிழந்தார். அவருடன் பேட்டிங் செய்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75* (70) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 299/5 ரன்களை எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

கலக்கல் போல்ட்:
இந்த வெற்றியால் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது வெற்றிப் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. முன்னதாக நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் எப்போதுமே அந்த அணியின் கடைசி பேட்ஸ்மேனாக அதாவது 11-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார். பொதுவாகவே 8, 9, 10, 11 ஆகிய இடங்களில் பேட்டிங் பற்றி பெரிதாக தெரியாத பவுலர்கள் பேட்ஸ்மேன்களாக களமிறங்குவார்கள். அதனால் களமிறங்கிய ஒருசில நிமிடங்களிலேயே தாக்கு பிடிக்க முடியாமல் ஒருசில ரன்களில் அவுட்டாகி செல்பவர்களாக கருதப்படும் அவர்களை வல்லுநர்கள் “டெயில் எண்டர்கள்” என்று அழைக்கின்றனர்.

அதிலும் 11-வதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி செல்வார்கள் அல்லது அவர்கள் அடிக்கலாம் என்று நினைத்தால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி சென்று விடுவார்கள். அதனால் அவர்கள் எப்போதும் பெரிய அளவில் ரன்கள் எடுப்பது அரிதினும் அரிதாக நிகழக் கூடியதாகும்.

- Advertisement -

அந்த வகையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் 16* (18), 2-வது இன்னிங்ஸ்சில் 17 (15) என மொத்தம் 33 ரன்களை எடுத்த டிரென்ட் போல்ட் “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்” என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:

1. ட்ரெண்ட் போல்ட் : 640* (79 இன்னிங்ஸ்)
2. முத்தையா முரளிதரன் : 623 (98 இன்னிங்ஸ்)
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 609 (164 இன்னிங்ஸ்)
4. கிளென் மெக்ராத் : 603 (128 இன்னிங்ஸ்)
5. கோர்ட்னி வால்ஷ் : 553 (122 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க : டி20 உலககோப்பை அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சேர்க்க கூடாது. ஏன் தெரியுமா? – கம்பீர் அதிரடி

11-வது இடத்தில் களமிறங்கினாலும் அவுட்டாக கூடாது என்பதற்காக முடிந்த அளவுக்கு எப்படி எல்லாம் பேட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கால்களை உயர்த்தி வித்யாசமாக பேட்டிங் செய்ய கூடிய டிரென்ட் போல்ட் பேட்டிங் செய்வதை பார்ப்து ரசிகர்களுக்கு கலகலப்பான விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement